ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றான ஹாக்கியில், அரை நூற்றாண்டிற்கும் அதிகமாக புகழுடனும், பெருமையுடனும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஹாக்கி, இன்று ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறக்கூட முடியாத ஒரு அவமானகரமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஆசிய போட்டிகள், உலக சாம்பியன் போட்டி உள்ளிட்ட ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் தகுதிபெறும் போட்டிகள் எதிலும் வெற்றி பெறாததும், 2006 ஆம் ஆண்டு ஆசியப் போட்டியின் இறுதிக்குத் தகுதி பெறாததாலும், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டதே பெரும் பின்னடைவாகும். இந்த நிலையில், சாண்டியாகோவில் நடைபெற்ற தகுதிப் போட்டிகளின் இறுதியில் (ஏற்கனவே சுழல் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணியைத் தோற்கடித்த) இங்கிலாந்து அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
இது ஏதோ சற்றும் எதிர்பாராத, திடீரென்று ஏற்பட்ட பின்னடைவாகவும் அவமானமாகவும் சித்தரிக்கப்படுவதுதான் ஆச்சரியமளிக்கிறது. இந்திய ஹாக்கியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு - ஹாக்கி கூட்டமைப்பில் இருந்து வரும் அரசியல், ஹாக்கி வீரர்களை தங்கள் மனம் போன போக்கிற்கு பந்தாடிய விதம் போன்றவற்றை பார்த்தவர்களுக்கு - இது நிச்சயம் அதிர்ச்சியாக இருக்க முடியாது.
ஹாக்கியை நமது தேச விளையாட்டாக கொண்டுள்ள இந்த நாட்டிற்கு இது ஒரு தலைக்குனிவாக இருந்தாலும், இந்தியாவின் ஹாக்கித் திறன் செத்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. இந்தப் பின்னடைவு, மீண்டும் வலிமையாக எழுவதற்கு நிச்சயம் ஒரு அடித்தளம்தான் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அது சாத்தியமாவதற்கு முன்னர், இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை முழுவதுமாக ஆராய்ந்து அதற்கு விடை கண்டு, அதனடிப்படையில் மறு எழுச்சிக்கு வித்திட வேண்டும்.
எதிர்பாராத மாற்றங்கள், வேகமான ஏற்புத் திறன்!
1928 முதல் 1980 ஆம் ஆண்டு வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றது இந்திய அணி. 1998 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசியப் போட்டிகள் வரை பல தங்கப் பதக்கங்களை வென்றது.
webdunia photo
FILE
எழுபதுகளில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த உலக ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹாக்கி என்றாலே - அதுவும் பாரம்பரிய ஹாக்கி என்றாலே - இந்தியாவும், பாகிஸ்தானும்தான் என்ற பெருமை இருந்தது.
எழுபதுகளுக்குப் பிறகு ஹாக்கி விளையாட்டில் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் தீவிரம் காட்டத் துவங்கியதும், அதுநாள் வரை சாதாரண மைதானங்களில் நடத்தப்பட்ட ஹாக்கிப் போட்டிகள் செயற்கை (ஆஸ்ட்ரோ டர்ஃப்) புல்தரைக்கு மாற்றப்பட்டதும் இந்திய, பாகிஸ்தான் ஹாக்கிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தின.
வேகமான அந்த மாற்றத்திற்கு அதே வேகத்தில் ஈடுகொடுக்க இவ்விரு நாடுகளின் ஹாக்கி கூட்டமைப்புகள் தவறியதும், செயற்கை புல் தரை வசதி கிடைக்காததால் போதுமான பயிற்சி பெற இயலாமல் போனதும் சர்வதேச போட்டிகளில் இவ்விரு அணிகளும் திணறுவதற்கு காரணமாயின.
ஆஸ்ட்ரோ டர்ஃப் ஆட்டங்களங்களின் வேகமும், அதற்கு தங்களை நன்கு பழக்கப்படுத்திக் கொண்ட ஐரோப்பிய அணிகளின் திறனும், ஹாக்கி ஆட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு மாறுதல்களும் இந்திய, பாகிஸ்தான் வீர்ர்களுக்கு பெருத்த சவாலை உருவாக்கின.
இத்தடைகளை இந்த இரு நாட்டு வீர்ரகளும் மிக வேகமாக தாண்டினர். செயற்கை ஆட்டக்களத்திற்கு ஏற்ற ஆட்டமுறையை மிக வேகமாக கற்றுக்கொண்டனர்.
ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, நியு ஸீலாந்து அணிகளின் அதிவேக ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடியது மட்டுமின்றி, அவ்வப்போது அதிர்ச்சியும் அளித்தனர்.
ஆனால் அந்த முன்னேற்றம் சீராக நடைபெறவில்லை. இரண்டு காரணங்கள் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.