மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளில் (2003,2007,2011) ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியவரும், அதில் இரண்டு உலக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமாக இருந்தவருமான ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு உதவிப் பயிற்சியாளராக உள்ளார்.
நேற்று மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உலகக் கோப்பைத் தொடரை வெல்வதற்கு இந்த முறை இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அது போலவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் நல்ல ஃபார்ம்மில் உள்ளன. நான் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியாளராக உள்ளதால் இதை சொல்லவில்லை. இங்கிலாந்து நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைகள் ஆஸ்திரேலியாவின் தட்பவெப்ப நிலைக்கு நன்றாக ஒத்துப்போகும். அதனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சொந்த நாட்டில் விளையாடுவது போன்றே இருக்கும். மேலும் சிறந்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்குத் திரும்புவது கூடுதல் பலத்தை அளிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.