விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி

திங்கள், 18 ஜனவரி 2016 (19:33 IST)
விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன.
 
பல விளையாட்டு வீரர்கள் பணத்துக்காக, போட்டிக்கு முன்பே முடிவை நிர்ணயிக்கும் வகையில் மேட்ச் ஃபிக்ஸிங் எனும் மோசடியில் ஈடுபட்டனர் எனும் சந்தேகங்கள் அந்த ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றன.
 
அசோசியேஷன் ஆஃப் டென்னிஸ் புரஃபஷனல்ஸ்- ஏடிபி கடந்த 2007 ஆம் ஆண்டு நடத்திய ஒரு விசாரணையில் ரஷ்ய மற்றும் இத்தாலியக் குற்றக் குழுக்கள், சந்தேகத்துகுரிய போட்டிகள் மீது பந்தயம் கட்டியதன் மூலம் லட்சக் கணக்கான டாலர்களை ஈட்டினர் என்பது அந்த ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.
 
ஆனால் விளையாட்டுத்துறை அதிகாரிகளோ, பந்தய மோசடி நடைபெற்றுள்ளது எனக் கூறும் ஆதாரங்களை மறுத்துள்ளனர்.
 
அப்படியான ஆதாரங்கள் மூடி மறைக்கப்படவும் இல்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்