காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: 7 தங்கம் உட்பட 26 பதக்கங்களை வென்றது இந்தியா

செவ்வாய், 29 ஜூலை 2014 (11:09 IST)
20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 7 தங்கம் உட்பட 26 பதக்கங்களைக் கைப்பற்றிய இந்தியா பதக்கப் பட்டியலில் 7 இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 85 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் பேட்டர்சன் 335 கிலோ (151+184) எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை வெல்ல, அவருக்கு அடுத்தபடியாக 333 கிலோ (150+183) எடையைத் தூக்கிய விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் விளையாட்டின் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி பத்தாவது பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்கள் பிரிவிற்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் (50 மீட்டர் ரைபிள் ப்ரான்) இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இறுதிச்சுற்றில் 31 வயதான ககன் நரங் 203.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீரர் வாரன் பொட்டன்ட் 204.3 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இங்கிலாந்து அணியின் கென்னத் பார் 182 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்திய அணி இதுவரை 7 தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 26 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 5 ஆவது இடத்திலிருந்து 7 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

30 தங்கம், 25 வெள்ளி 32 வெண்கலம் என 87 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்