மகளிருக்கான தேசிய விளையாட்டு: சுபாஷினிக்கு தங்கப்பதக்கம்

வெள்ளி, 18 டிசம்பர் 2009 (12:33 IST)
சென்னையில் நடந்து வரும் மகளிருக்கான தேசிய விளையாட்டு விழாவின் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீராங்கனை சுபாஷினி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் நடத்தப்பட்டு வரும் 35வது மகளிர் விளையாட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் தமிழகம், டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம், கேரளா உட்பட 24 மாநிலங்களைத் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

விழாவின் 2வது நாளான நேற்று, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பிரதீபா 2:15.01 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். பிரீத்தி லம்பா 2வது இடத்தையும், மன்பிரித் கவுர் 3வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ரேணுகா வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதலில் தமிழக வீராங்கனை அனிச்சம் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை சுபாஷினி (5.90 மீட்டர்) தங்கப்பதக்கம் வென்றார். தமிழக வீராங்கனை ராதிகா (5.67 மீட்டர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்