கேல்ரத்னா விருது: மேரி கோம் பெயர் பரிந்துரை

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 4 முறை கைப்பற்றிய மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் குத்துச்சண்டை வீரர் வீஜேந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டு அமைச்சகம் சிறந்த வீரர்-வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த 2008-09ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர்சிங் (குத்துச்சண்டை), சுஷில் குமார் (மல்யுத்தம்) ஆகியோர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேரி கோமுக்கு விருது கிடைப்பது உறுதியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் கௌதம் கம்பீர் (கிரிக்கெட்), சினிமோல் பவுலோஸ் (தடகளம்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), சரிதா தேவி (குத்துச்சண்டை), இக்னேஸ் திர்கே (ஹாக்கி), சுரேந்தர் கௌர் (ஹாக்கி), ரோஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்), மங்கல் சிங் சாம்பியா (வில்வித்தை), பவ்லோமி கடக் (டேபிள் டென்னிஸ்), தானியா சச்தேவ் (செஸ்), யோகஸ்வர் தத் (மல்யுத்தம்), சதீஷ் ஜோஷி (படகுப் போட்டி), பங்கஞ் ஷிர்சத் (கபடி) ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு கோபி சந்த் (பேட்மின்டன்), சத்பால் (மல்யுத்தம்), பல்தேவ் சிங் (ஹாக்கி), ஜெய்தேவ் பிஷித் (குத்துச்சண்டை), உதய் குமார் (கபடி) ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்