தற்போது 37 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு நடக்கப்போகும் உலகக்கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏறகனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் அவரது கிரிக்கெட் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இல்லை. இந்தாண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 போட்டிகளில் களமிறங்கி 252 ரன்களே சேர்த்துள்ளார். அவரது சராசர் 25. அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தாண்டே மோசமான ஆண்டாகும்.
அதேப்போல இருபது ஓவர் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் களமிறங்கி 123 ரன்களை சேர்த்துள்ளார். இதில் அவரது சராசரி 41. ஒருநாள் போட்டிகளை ஒப்பிடும் போது இருபது ஓவர் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் திருப்தி சளீக்கும் விதத்திலேயே உள்ளன. அப்படி இருந்தும் ஒருநாள் போட்டிகளை விட்டு இருபது ஓவர் போட்டிகளில் அவரது பெயரை நீக்கக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் ‘ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இன்னும் 6 மாதத்தில் உலக்கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு அனுபவம் வாய்ந்த திறமையான தோனியின் தேவை உள்ளது. ஆனால் டீ20-ஐ பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டுதான் உலகக்கோப்பைப் போட்டிகள் உள்ளன. அதுவரை தோனி விளைடாடப் போவதில்லை. அதனால் தோனியை ஓய்வு என்ற பெயரில் நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பாண்ட்டுக்கு அணியில் வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நீண்டகால யோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தோனி ரசிகர்கள் இதனால் கோபமடைந்து கோலி மற்றும் பிசிசிஐ-ஐ சமூக வலைதளங்களில் திட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் இதே போன்று கம்பீர், யுவராஜ், சேவாக், லக்ஷ்மன் ஆகியோரை தோனி அணியில் இருந்து ஓரங்கட்டியதை மேற்கோள் காட்டியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.