பி.சி.சி.ஐ. மூக்கை உடைக்க 'சானல்-9' திட்டம்?

செவ்வாய், 25 அக்டோபர் 2011 (14:01 IST)
நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை தனது அதிகாரத்தை வைத்து முடிவுக்குக் கொண்டுவந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூக்கை உடைக்க ஆஸ்ட்ரேலியாவின் சானல்-9 திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது கட்டாயமாக டீ.ஆர்.எஸ். பயன்படுத்தப்படவேண்டும் என்ற ஐ.சி.சி.யின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இங்கிலாந்து தொடரிலும் அதற்கு முன்பாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அந்தத் தொழில் நுட்பம் செய்த கோளாறுகளை அடிஅயாளம் காட்டி கட்டாய முறையை நிராகரிக்கச் செய்தனர்.

சச்சின் டெண்டுல்கர், தோனி, ஆகியோர் இதனை பட்டவர்த்தனாகக் குறை கூற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஆதரவு காட்டினார்.

இதன் படி தற்போது விளையாடும் இரு அணிகளின் சம்மதம் இல்லாமல் டீ.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த முடியாது என்று ஐ.சி.சி. பணிந்தது.

இந்த நாடகங்களை முறியடிக்கும் விதமாக இந்திய அணி ஆஸ்ட்ரேலியா செல்லும் போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை ஒளிபரப்பும் சானல் - 9 தொலைக்காட்சி டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் நடுவர் தீர்ப்பு கடும் விமர்சனத்துக்குள்ளாகும் என்பதோடு இந்திய வீரர்களின் 'பிரபை'யும் கேள்விக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்ட்ரேலியா என்றாலே சர்ச்சைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் மைதானத்தில்தான் சர்ச்சை நடைபெறும் இந்த முறை தொலைக்காட்சி களத்திற்கு வெளியே சர்ச்சைக்கு தயாராகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்