நியாயமாக நடக்குமா நடிகர் சங்க தேர்தல்?

ஜே.பி.ஆர்.

சனி, 12 செப்டம்பர் 2015 (17:17 IST)
அக்டோபர் 17ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், விஷால் அணியைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷின் மீது கொலை மிரட்டல் புகார் தரப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது.
 

 
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,139. இதில் கணிசமான உறுப்பினர்கள் சினிமாவில் நடிக்காத நாடக நடிகர்கள். அவர்களின் ஆதரவை வைத்தே சரத்குமாரும், ராதாரவியும் இதுவரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று வந்தனர். விஷால் தரப்பினரை இந்தமுறை தோல்வியடைச் செய்ய இவர்களைத்தான் சரத்குமாரும், ராதாரவியும் நம்பியுள்ளனர்.
 
சாதாரண சங்க தேர்தல் என்பதைத் தாண்டி இது பரஸ்பர ஈகோவாக உருவெடுத்துள்ளது. ஒரு கத்துக்குட்டி நடிகரிடம் தோற்பதா என்று இப்போது பொறுப்பிலிருப்பவர்கள் பொருமுகிறார்கள்.
 
செத்தது மார்க் ஆண்டனி என்றால் கொன்றது மாணிக் பாட்ஷா. ராதாரவி அணியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தப் பழி தங்கள் மீதுதான் விழும் என்ற உண்மை தெரியாதவர்களில்லை விஷால் அணியினர். அப்படியிருக்க, ரித்தீஷ், பூச்சி முருகன் உள்பட ஒருகூட்டம் எதிரணியினர் கொலை மிரட்டல் விடுத்தாக கமிஷனரிடம் புகார் தந்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஷால் தரப்பினரையும், நாடக நடிகர்களையும் ஒன்றிணையாமல் தடுக்கும் நாடகங்களும் அரங்கேற வாய்ப்புள்ளது.
 
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கும், ராதாரவி செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். எதிரணியில் நாசர் தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். மற்ற பதவிகளுக்கு யார் போட்டியிடுகிறார்கள் என முடிவாகவில்லை. 
 
சரத்குமார் அணியில் குயிலி, குண்டு கல்யாணம், நளினி என ஆளும்கட்சிக்கு ஆதரவானவர்கள் அணிவகுப்பதால் பதவிக்கான வேட்பாளர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்பட்டபின் போட்டியும், புரளியும் அதிகமாகும் என்று நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்