விஜய் படங்கள் வெளியாவதில் ஏற்படும் சிக்கல்கள் - ஒரு அலசல்

திங்கள், 18 ஏப்ரல் 2016 (17:15 IST)
கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 


 

 
2010ஆம் ஆண்டு விஜய் நடித்த ’காவலன்’ திரைப்படத்தில் இருந்துதான் இந்த பிரச்சனை தொடங்கியது. படம் வெளியாக தயாரான வேளையில், அதை எதிர்த்து வினியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், கோவை தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட மாட்டோம் என்று கூறினார். 
 
அதன்பின் ஒருவழியாக சிக்கல் தீர்ந்து அந்தப்படம் வெளியானது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகதான் பிரச்சனையை உண்டாக்கியது என்று பேசப்பட்டது.
 
அதேபோல்,  ‘தலைவா ’ பட வெளியீட்டின் போதும் பிரச்சனை வெடித்தது. இந்த படத்தை வெளியிட்டால், திரையரங்குகளில் குண்டு வைக்கப்படும் என்று அரசுக்கு மர்ம கடிதம் வந்ததாக கூறி, பாதுகாப்பு கருதி தமிழக அரசு தடை விதித்தது. இதனால், படம் வெளியாகவிருந்த தேதியிலிருந்து 10 நாட்கள் கழித்துதான் இந்தப்படம் வெளியானது.
 
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைமை வரை போனது. 
 
அதற்கு காரணம் அந்த படத்தின் தலைப்பும், பட விளம்பரங்களில் 'Time to lead' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம், ஆளும் கட்சியை கோபப்படுத்தியதாகவும், அதனால்தான் அந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
அதேபோல்,  ‘துப்பாக்கி’ படம் வெளியாகவிருந்த நேரத்தில், அந்தப்படம் அனைத்து முஸ்லீம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என்று கூறி சில முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதன்பின் சில காட்சிகளை நீக்கிவிட்டும், சில வசனங்களை மியூட் செய்தும் வெளியிட்டார்கள்.
 
‘கத்தி’ படத்தை பொறுத்தவரையில், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவிற்கு நெருக்கமானது. எனவே இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின், ஒரு வழியாக அந்த பிரச்சனையை தீர்த்து படத்தை வெளியிட்டார்கள்.
 
அதேபோல்,  ‘புலி’ படம் வெளியான தருணத்தில், விஜய் உட்பட அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால், அந்தப்படம் காலையில் வெளியாகாமல், மாலைதான் வெளியானது.
 
தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்  ‘தெறி’. இந்தப்படம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து படத்திற்கு அதிக விலை விதிப்பதாலும், மினிமம் கேரண்டி முறையில் படத்தை வாங்க கூறி வற்புறுத்துவதாலும் இந்த படம் அங்கு வெளியாகவில்லை. 
 
இதனால் சென்னையிலேயே, முக்கிய தியேட்டர்களில் மட்டுமே இப்படம் வெளியாகியிருக்கிறது. செங்கல்பட்டு பகுதிக்கு உட்பட்ட பல தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்படவில்லை. இது, அந்த பகுதியில் வசிக்கும் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே விஜய் படம் என்றாலே வெளியாவதில் சிக்கல் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், விஜயின் அரசியல் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான் என்றும், அவரின் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுத்தி, மறைமுகமாக ஆளும் அரசுகள் அவரை எச்சரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
இதையெல்லாம் நடிகர் விஜய் எப்படி சமாளித்து வெற்றி வாகை சூடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்