விஜய் நடிக்கும் அட்லி படத்தின் கதை என்ன?

ஜே.பி.ஆர்

வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (09:45 IST)
புலி படத்தில் நடித்து வருகிறார், விஜய். சிம்புதேவன் இயக்கம். ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப் என்று வௌ;வேறு பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்திருக்கிறார்கள். சிம்புதேவனின் முந்தைய படங்களை வைத்து, புலி ஒரு ஃபேண்டசி கதை என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
 

 
புலிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஷங்கரின் அசிஸ்டெண்ட், ராஜா ராணி என்ற ஹிட் படத்தின் இயக்குனர் என்று அட்லியின் பயோடேட்டா மதிப்பு மிக்கது. 
 
ராஜா ராணி படத்தை தமிழக இளைஞர்கள் மாய்ந்து போய் பார்த்தார்கள். கதை, காட்சிகளைத் தாண்டி ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் என்ற இளமை பட்டாளம் அவர்களை வசீகரித்தது. அவர்களை எப்படி காட்டினால் பிடிக்கும் என்பது அட்லிக்கு தெரிந்திருந்தது.
 
இப்படி சொல்லும்போது, அவருக்கு மௌனராகம், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த படம் எல்லாம் தெரிந்திருக்கிறது என கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு கேட்கிறது. மேலே உள்ள படங்களை பிசைந்து ராஜா ராணிக்கு அவர் வடிவம் தந்ததாக சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர். 
 
இந்தப் பின்னணியில், அட்லி விஜய்யை வைத்து எடுக்கப் போகும் படம் என்ன கதை என்று கோடம்பாக்கத்தில் தினம் விவாதம் நடக்கிறது. விவாதத்தின் முடிவு ஒரு படத்தை சுட்டிக் காட்டுகிறது. அது, மணிரத்னம் தயாரிப்பில் சுபாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சத்ரியன்.
 
விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த படம், சத்ரியன். அவர் அண்டர்ப்ளே செய்த ஒரே படம் ரமணா என்று சொல்லப்படுவது தவறு. அவர் அண்டர்ப்ளே செய்த முதல் படம், சத்ரியன். நீ வரணும், பழைய பன்னீர் செல்வமாக வரணும் என்று தனது தகர குரலில் திலகன் விஜயாகாந்தை மிரட்டும் காட்சியை சத்ரியன் படம் பார்த்த கண்கள் மறந்திருக்காது. அந்தப் படத்தை சில மாறுதல்களுடன் அட்லி எடுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
அட்லி படத்தில் விஜய் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிப்பதாகவும், திலகன் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. திலகனையொத்த கரகர குரல் பாரதிராஜாவுக்கு என்பதால் இந்தத் தேர்வு என்றும் கூறுகிறார்கள். நம்புகிற மாதிரிதான் இருக்கிறது.
 
தோல்வி அடைந்த சில படங்களை, கொஞ்சம் மாற்றி மீண்டும் எடுத்தால் வெற்றிப் படமாக்கலாம் என்று கமல் அடிக்கடி கூறுவார். வெற்றி பெற்ற படங்களை கொஞ்சம் மாற்றி எடுத்து, மாபெரும் வெற்றியாக்கலாம் என்று அட்லி நிரூபித்திருக்கிறார். இந்த வெற்றி ஃபார்முலாவில்தான் அவர் விஜய் படத்தை எடுக்க இருப்பதாக பேச்சு நிலவுகிறது.
 
படம் வெளிவரும்வரை பேச, விவாதிக்க ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்