வெங்கட்பிரபுவின் மாஸ் - மேட் இன் கொரியா?

ஜே.பி.ஆர்.

செவ்வாய், 26 மே 2015 (20:24 IST)
தமிழில் தயாராகும் பல படங்கள் பிற மொழிப் படங்களின் பாதிப்பில், அப்படம் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியில்லாமல் தழுவி எடுக்கப்படுபவை. அதிகமும் கொரியப் படங்கள். 
 
இயக்குனர் வெங்கட்பிரபு இதுவரை எந்தப் படத்தையும் தழுவி எடுத்ததில்லை. அப்படியே ஒரு படம் அவரை பாதித்தால், அதனை முன்பே அறிவித்துவிடுகிறவர். பேபெல் படத்தின் திரைக்கதையின் பாதிப்பால் எழுதப்பட்டதே சரோஜா என்பதை படம் வெளிவரும் முன்பே கூறினார். அதேபோல், ஹாலிவுட்டின் அமெரிக்கன் பை போன்ற ஒரு படத்தை செய்ய வேண்டும் என்ற முயற்சியே, கோவா எனவும் கூறியுள்ளார்.
 

 
வெங்கட்பிரபு மீது வீணாக ஒரு வதந்தியை சுமத்தக் கூடாதல்லவா, அதற்குதான் இந்த நீண்ட பீடிகை.
 
2010இல் தென்கொரியாவில் வெளியான படம், ஹலோ கோஸ்ட். அந்த வருடம் கொரியாவில் அதிகம் வசூலித்தப் படங்களில், ஹலோ கோஸ்டும் ஒன்று. நகைச்சுவையை மையப்படுத்தியது.
 
பலமுறை தற்கொலைக்கு முயலும் ஒருவன் தனது கடைசி முயற்சியில் முன்பின் அறிமுகமில்லாத சிலரை சந்திக்கிறான். அவர்கள் ஏற்கனவே இறந்து போனவர்கள். ஒரேயொரு நிபந்தனையுடன் அவர்கள் இவனை விட்டுவிடுகிறார்கள். அதாவது, அவர்களின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்ய, அவன் இறந்து போன அவர்களுக்கு தனது உடலை தர வேண்டும். அப்படி இறந்து போனவர்கள் இவனது உடலைப் பயன்படுத்தி தங்களின் நிறைவேறாத ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்கள்.
 
இந்தக் கதையை தனது பாணியில் மாற்றி மாஸ் படத்தை (இப்போது இதன் பெயர் மாஸு என்கிற மாசிலாமணியாம் - எல்லாம் வரிச்சலுகையின் விபரீதம்) எடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு என ஸ்டுடியோ வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதனை உறுதி செய்வது போல், இந்தப் படத்தில் வரும் சில ஆவிகள் சூர்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்களாம். 
 
இந்த மெயின் பிக்சரை ஒட்டி ஓட்டப்படும் ட்ரெய்லர் இன்னும் சுவாரஸியமானது.
 
இந்த ஹலோ கோஸ்ட் படத்தின் இன்ஸ்பிரேஷனில், மாஸுக்கு முன்பே ஒரு படம் தமிழில் தயாராகியது. ஸ்ரீகாந்த் நடித்த, ஓம் சாந்தி ஓம். மாஸ் படத்தை ஆரம்பித்த பிறகே, ஓம் சாந்தி ஓம் படம் ஹலோ கோஸ்டின் தழுவல் என்பது தெரிய வந்ததாம். ஓம் சாந்தி ஓம் வெளிவந்தால் மாஸுக்கு சிக்கலாகிவிடும் என்பதாலேயே ஓம் சாந்தி ஓம் படத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள் என அந்த முகாமில் முணுமுணுப்பு கேட்கிறது. முறைதவறிய தழுவல் என்பதால் முனங்கி அழக்கூட முடியாத அவஸ்தை அவர்களுக்கு.
 
விஷயம் இத்தோடு முடியவில்லை. ஹலோ கோஸ்ட் படத்தின் ரீமேக் உரிமையை ஹாலிவுட் நிறுவனமான 1492 பிக்சர்ஸ், 2011 -இல் வாங்கியது. அவர்களின் ஆஸ்தான இயக்குனரான க்ரிஷ் கொலம்பஸ்தான் படத்தை இயக்க வேண்டும் என்று காத்திருந்ததால் ரீமேக்கை தொடங்க காலதாமதமானது. இப்போது ஹாலிவுட்டின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவரான ஆடம் சான்ட்லரை வைத்து ஹலோ கோஸ்டின் ஹாலிவுட் ரீமேக்கை ஆரம்பித்திருக்கிறார்கள். ஹலோ கோஸ்ட் என்ற பெயரிலேயே இப்படம் தயாராகிறது.
 
ஹாலிவுட்டின் ஹலோ கோஸ்ட் மட்டும் வெளிவந்தால் கோலிவுட்டின் பல கோஸ்ட்களுக்கு சிக்கலாகிவிடும். அதுதான் அடித்துப் பிடித்து சீக்கிரமே படத்தை வெளியிடுவதாக கூறுகிறார்கள்.
 
கொரிய பேய் வெங்கட்பிரபுவை பாதித்திருக்கிறதா இல்லை இது அவரது சொந்தப் பேய்தானா என்பதெல்லாம் வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்