இந்த வாரம் வெளியாகும் முக்கிய படங்கள் ஒரு பார்வை

வியாழன், 6 அக்டோபர் 2016 (10:03 IST)
செப்டம்பர் மாதத்தில் வெளியான இருமுகன், ஆண்டவன் கட்டளை படங்கள் நல்ல வசூலை பெற்று தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு உரம் சேர்த்துள்ளன. அக்டோபர் மாதத்தில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பை இது அதிகப்படுத்தியுள்ளது.


 
 
நாளை முக்கியமான நான்கு படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் முன்னணியில் உள்ளது சிவகார்த்திகேயனின் ரெமோ.
 
ரஜினி, விஜய், அஜித்துக்குப் பிறகு விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் விரும்பும் நடிகராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது சுமார் படங்களான காக்கி சட்டையும், மான் கராத்தேயும்கூட லாபம் சம்பாதித்து தந்தன. 
 
ரெமோ படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். காதலுக்காக பெண் வேஷம் போடும் ஹீரோ என்று வழக்கமான கதைதான். ஆனால், அதனை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் நாயகி. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை என்று பக்கா டீம்.
 
இதன் ட்ரெய்லர் வெளியாகி முதல் 4 தினங்களில் 40 லட்சம் பார்வைகளை கடந்து அனைவரையும் அதிசயிக்க வைத்தது. இந்த வார படங்களில் ரெமோவுக்குதான் அதிகபட்ச ஓபனிங் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று.
 
நாளை வெளியாகும் இன்னொரு முக்கியமான திரைப்படம், விஜய் சேதுபதியின் றெக்க. இந்த வருடம் அவரது நடிப்பில் வெளிவந்த 5 படங்களுமே ஹிட். றெக்கயில் வித்தியாசமாக ஆக்ஷனில் கலக்கியுள்ளார். வா டீல் படத்தை இயக்கிய ரத்ன சிவா றெக்கையை இயக்கியுள்ளார். லட்சுமி மேனன் நாயகி. டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
றெக்க இந்த வருடத்தின் விஜய் சேதுபதியின் ஆறாவது ஹிட்டாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
 
நாளை வெளியாகும் மற்றொரு படம், தேவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா மற்றும் இந்தி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. 
 
ஏ.எல்.விஜய்யின் படங்கள் சுமாராகவே போகும். மாறாக தேவி சிறப்பாக வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தேவி எந்தப் படத்தின் தழுவலாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
ஜீவா, காஜல் அகர்வால் நடித்துள்ள கவலை வேண்டாம் திரைப்படமும் நாளை வெளியாகிறது. யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யாமிருக்க பயமே படத்தை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெய்ன்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது. 
 
டிகே முதல் படத்தில் ஒரு கொரியன் படத்தை தழுவினார். இதில் எந்த நாட்டு படத்தை தழுவியிருக்கிறார் என்று தெரியவில்லை.
 
இந்த நான்கு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்க வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்