தெறி படத்தை சதவீத அடிப்படையில்தான் திரையிடுவோம், மினிமம் கியாரண்டி அடிப்படையில் தெறியை வாங்க மாட்டோம் என்பதில் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக இருந்தனர்.
அதனால் செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 95 சதவீத திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை.
இதற்கு பதிலடியாக கபாலி, 24, எஸ் 3 போன்ற படங்களையும் செங்கல்பட்டு திரையரங்குகளுக்கு தருவதில்லை என தாணுவும், ஸ்டுடியோ கிரீனும் முடிவெடுத்து அறிவித்தனர். திரையரங்கு உரிமையாளர்களும் விடுவதாயில்லை. கபாலி செங்கல்பட்டில் வெளியாகாது என்றால் தமிழகத்தில் எங்கும் வெளியாகாது என்று அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. அதில், எந்தவொரு புதிய படத்தையும் செங்கல்பட்டு திரையரங்குகளுக்கு வழங்குவதில்லை என்று முடிவெடுத்தனர். திரையுலகில் பெரும் பிரச்சனை வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த நெருக்கடியில் தண்ணி தெளித்தவர் உதயநிதி.
"என்னுடைய படங்களுக்கு கடந்த 5 வருடங்களாக அரசு வரிச்சலுகை தரவில்லை. அதனை தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்காக நான் ஏன் என்னுடைய படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடாமல் இருக்க வேண்டும்? என்னுடைய படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்" என்றார்.
செங்கல்பட்டு ஏரியாதான் இருப்பதிலேயே பெரியது. தயாரிப்பாளர்கள் இங்கு படத்தை வெளியிடவில்லை எனில் நஷ்டத்தை சந்திப்பது உறுதி. தாணுவைப் போன்ற பெரிய தயாரிப்பாளர்களுக்கு லாபத்தில்தான் நஷ்டம். ஆனால், மற்றவர்களுக்கு?
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு அடுத்தநாளே அவர்களின் முடிவு முறியடிக்கப்பட்டது. சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர். தங்களது முடிவு ஏற்கக் கூடியதல்ல என்பது தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தெளிவாக புரிந்து போயிற்று.
அதனைத் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், அருள்பதி ஆகியோர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பலகட்டமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இப்போது முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......
சென்னையில் உள்ள திரையரங்குகள் விகிதாச்சார முறைப்படியே திரைப்படங்களை வெளியிடுகின்றன. அதாவது டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீதம் திரையரங்குகளுக்கு, 70 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கு என பிரித்துக் கொள்வார்கள். இரண்டாவது வாரம் இது 40 - 60 என மாறும். இந்த விகிதாச்சாரம் படங்களைப் பொறுத்தும், திரையரங்குகளை பொறுத்தும் மாறுபடும். மினிமம் கியாரண்டி என்ற பெயரில் பெரும்தொகை தயாரிப்பாளர்களுக்கு படத்தை வெளியிடும் முன்பே திரையரங்குகள் தரவேண்டியதில்லை.
இதேமுறையை செங்கல்பட்டு ஏரியாவிலும் நடைமுறைப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அத்துடன், திருப்பூர் சுப்பிரமணியம், தாணு, அருள்பதி, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
திரைத்தொழில் சம்பந்தமாகவும், அரசிடம் பெறவேண்டிய சலுகைகள் சம்பந்தமாகவும் எந்த ஒரு முடிவு எடுப்பதாலும், இக்குழுவின் முடிவு இறுதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தெறியில் சில லட்சங்களை செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் இழந்தாலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றி வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். முக்கியமாக கபாலி வெளியாகும் போது அவர்கள் லட்சக்கணக்கில் தயாரிப்பாளருக்கு பணம் தர வேண்டியதில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை தயாரிப்பாளருக்கு தந்தால் போதுமானது.