தெறி ஆடியோ விழா - ஒரு சிறப்பு கண்ணோட்டம்

திங்கள், 21 மார்ச் 2016 (14:31 IST)
தெறி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான தாணு அனைவரையும் வரவேற்றார். 


 
 
விழாவுக்கு படத்தின் காஸ்டியூம் டிசைனர் சத்யா, எடிட்டர் ஆண்டனி, கலை இயக்குனர் முத்துராஜ், தயாரிப்பாளர் தனஞ்செயன், அபிராமி ராமநாதன், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை மீனா மற்றும் அவரது மகள் நானிகா ஆகியோர் வருகை புரிந்தனர். விஜய்யின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
 
கடைசியா விஜய் மேடைக்கு வந்தார். விழாவினை ரம்யா தொகுத்து வழங்கினார்.
 
நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் மேடையேறி பேசினார். நைனிகா தெறியில் விஜய்யின் மகளாக நடித்துள்ளார். 
 
மீனா
 
என்னுடைய மகளை ‘தெறி’ படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தபோது முதலில் நான் மறுத்தேன். ஆனால், அட்லி இந்த கதாபாத்திரத்திற்கு என்னுடைய மகள் பொருத்தமாக இருப்பாள் என்பதில் உறுதியாக இருந்தார். என்னுடைய 4 வயது குழந்தை இவ்வளவு சீக்கிரமாக சினிமாவில் நுழையவிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும், நல்ல கதை, என்னுடைய மகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் எல்லாம் சரியாக அமைந்தததால் இதில் நடிக்க வைக்க சம்மதித்தேன்.
 
விஜய் மிகவும் அமைதியான நபர். அதிகம் பேசமாட்டார். அப்படியே அவர் ஒரு வார்த்தை பேசினாலும் அது நறுக்கென்று இருக்கும்.  அவருடைய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை உணர்வும் எனக்கு மிகவும் பிடிக்கும். 
 
நைனிகா
 
விஜய் அங்கிள்தான் எனக்குப் பிடித்தமானவர்.
 
இயக்குனர் மகேந்திரன் 
 
நான் விஜய் படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. கடவுள் மிகவும் அற்புதமானவர். தாணு இப்படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, நீங்கள் உங்க படத்துல உலகத்தை காட்டினீங்க. நான் இந்த உலகத்துல உங்கள நடிகனா காட்ட ஆசைப்படுறேன்னு சொன்னார். 
 
எனக்கு நடிக்க வரும்னு எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தாணு சாருக்காக நடித்தேன்.  இளையதளபதி விஜய்யும் நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறினார். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. நல்ல மனிதனுக்கு ஒரு எடுத்துக்காட்டு விஜய். விஜய் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும், ரொம்பவும் அமைதியான நபர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.......

 


இயக்குனர் அட்லி 
 
தெறி -யில் ரொமான்டிக் விஜய், மாஸ் விஜய், குடும்பங்களுக்கு பிடித்த விஜய் என மூன்றுவிதமான விஜய்யை ஒரே படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் நானும் விஜய்யும் அண்ணன், தம்பி போல சேர்ந்து வேலை பார்த்தோம். ஒவ்வொரு விஷயத்திற்கும் அவர் எனக்கு தோளோடு தோள் கொடுத்து உதவினார். ‘தெறி’ படம் ஒரு நல்ல அப்பாவை பற்றியது. அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்தாலே இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை ‘தெறி’ படம் மூலமாக நான் சொல்லியிருக்கிறேன். இந்த படத்தில் அரசியல் எல்லாம் கிடையாது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடலுக்கு விஜய் தொடர்ந்து 40 வினாடிகள் ஒரே டேக்கில் ஆடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும்.
 
விஜய்
 
இதுநாள் வரை ஜி.வி.பிரகாஷின் ஸ்டுடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த ‘தெறி’ படத்தின் பாடல்கள் இன்று உலகம் முழுவதும் தெறித்து கொண்டிருக்கிறது. ‘ராஜாராணி’ என்கிற ஒரு அழகான காதல் படத்தை கொடுத்த அட்லி, என்னை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க வேண்டும் என்ற வெறிதான் இந்த ‘தெறி’. அவர் இந்த வயதில் எட்டியிருக்கும் உயரம் மிகவும் பெரியது. 
 
இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று செல்பி புள்ள, மற்றொன்று குல்பி புள்ள. இதில் யாருக்கும் முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமேதான். மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் எனக்கு மகளாக நடித்திருக்கிறார். 
 
இயக்குனர்களின் ஹீரோ மகேந்திரனுக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம். ‘உதிரிப்பூக்கள்’ என்ற படத்தை கொடுத்து மக்கள் மனதில் உதிரமால் இருக்கும் இவருடைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால், என்னுடைய படத்தில் அவர் நடித்தது பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
 
நாம் நிறைய தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒரு புலி மான்கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது அந்த புலி எல்லா மான்களையும் துரத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு அதை வேட்டையாடி கொள்ளும். அந்த புலிதான் கலைப்புலி. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு அதை தேடி பிடித்து புலியாக வலம் வருகிறார். 
 
என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை தொடவேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. அடுத்தவர்கள் தொட்ட உயரங்களை உங்களது இலக்காக எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் தொட்ட உயரங்களை மற்றவர்களுக்கு இலக்காக அமையுங்கள். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய உயரத்தை தொடவேண்டும். உங்கள் வாழ்க்கையில் கர்வங்களை விட்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்