முதல்நாளே பிசுபிசுத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு
சனி, 23 ஏப்ரல் 2016 (13:18 IST)
மினிமம் கியாரண்டி முறையில் தெறி படத்தை திரையிட மாட்டோம் என்ற செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்களின் முடிவால், தெறி படம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஏரியாக்களில் மொத்தமே 11 திரையரங்குகளில்தான் வெளியானது.
குறைந்தது 60 திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம், 11 திரையரங்குகளில் மட்டும் வெளியானதால், படத்தை வாங்கிய எஸ்பிஐ சினிமாவுக்கும், இன்னொரு விநியோகஸ்தருக்கும் சில கோடிகளை தாணு திருப்பித்தர வேண்டி வந்தது.
இந்தப் பிரச்சனையை தொடர்ந்து தாணுவின் கபாலி படத்தை, தெறியை திரையிடாதவர்களுக்கு தரப்போவதில்லை என்று அறிவித்தார். ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா, தாணுவின் முடிவை ஆதரிக்கும்வகையில், சூர்யா நடித்துள்ள 24, எஸ் 3 படங்களையும் தெறியை திரையிடாதவர்களுக்கு தரப்போவதில்லை என்றார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடந்தது. அதில், கபாலியை எங்களுக்கு தரவில்லை என்றால் தமிழகத்தில் யாரும் கபாலியை திரையிட மாட்டார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.
விட்டேனா பார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களின் அவசர கூட்டத்தை நடத்தியது. தெறியை திரையிட்ட 11 திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகளுக்கு எந்தப் புதுப்படத்தையும் தருவதில்லை என்று ஒரு கடும் அஸ்திரத்தை பிரயோகித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய படங்களுக்கு அரசு வரிச்சலுகை தரவில்லை. அதனை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட போவதில்லை, என்னுடைய மனிதன் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என்று முதல் குண்டை போட்டார் உதயநிதி ஸ்டாலின்.
நேற்று அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. நேற்று வெளியான சசிகுமாரின் வெற்றிவேல், என்னுள் ஆயிரம் திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் முடிவுக்கு மாறாக தெறியை வெளியிடாத திரையரங்குகளுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தந்துள்ளனர். பெரிய தயாரிப்பாளர்கள் எப்படியும் போட்ட காசை எடுத்துவிடுவார்கள். ஆனால், சின்ன தயாரிப்பாளர்கள் கிடைக்கிற தியேட்டர்களில் படத்தை ஓட்டினால்தான் போட்ட பணத்தையாவது எடுக்க முடியும். அதனால்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு முதல்நாளே புஸ்ஸாகியுள்ளது.