கோமாவில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்

ஜே.பி.ஆர்

வியாழன், 23 ஏப்ரல் 2015 (09:43 IST)
தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. வந்தன என்று இறந்த காலத்தில் சொல்வதற்கு காரணம், 2008 -ஆம் ஆண்டுடன் அந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் நிறுத்தினார்கள்? எதற்காக நிறுத்தப்பட்டன? கேட்பதற்கும், பதில் சொல்லவும் இங்கு ஆளில்லை.
ஆந்திர அரசு வருடந்தோறும் நந்தி விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை கௌரவிக்கிறது. கர்நாடக அரசும் அப்படியே. கேரள அரசு வெளிமாநிலங்களைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்களையும் நடுவர் குழுவில் இடம்பெறச் செய்து வருடா வருடம் சிறந்த திரைப்படங்களை, திரைப்படக் கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்குகிறது. கோமாவில் இருப்பது தமிழக அரசு மட்டும்.
 
2008 -க்கு முன்புவரை தொடர்ச்சியாக இந்த விருதுகள் வழங்கப்பட்டனவா என்றால், அதுவும் இல்லை. அவ்வப்போது விருதுகள் வழங்குவது தடைபடும். பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு சேர்த்து வழங்குவார்கள். திதி வழங்குவது போல. 
 
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சீரழிந்து கோமாவுக்குப் போனதற்கு, தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளும், திரைப்பட சங்கங்களுமே பொறுப்பு. திரைப்பட விருதுகளை தங்கள் கட்சிக்கு விசுவாசமானவர்களை குஷிப்படுத்தும் பண்டமாக இரு திராவிட கட்சிகளும் நினைத்து, தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கினர். கலைமாமணி விருது எப்படி கெட்டு சீரழிந்து ஆளும்கட்சியினரின் விருதாகியதோ அதேபோல்.
கேரளாவில் திறமையில்லாத ஒருவர் விருதுக்கு தகுதிப்பெற்றால் உடனடியாக விவாதம் எழும். அரசை திரைப்பட கலைஞர்கள் தட்டிக் கேட்பார்பகள். கடந்தமுறை விருது தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த பாரதிராஜா அனைத்துப் படங்களையும் பார்க்காமல் விருதுக்குரிய படங்களை தேர்வு செய்தார் என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இங்கு?
 
அரசை எதிர்த்து ஒரு சொல் பேச திரையுலகினர் நடுங்குகின்றனர். உரிமைகளையும், சலுகைகளையும் கேட்டு பெறாமல் ஜால்ரா அடித்து வாங்கியவர்களால் எப்படி எதிர்த்துப் பேச வாய் வரும்? 
 
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், ஆளும்கட்சி திரைப்பட விருதுகளாகிப் போனதே திரைப்பட விருதுகள் கோமா நிலைக்கு சென்றதற்கு காரணம். அதனை சுயநினைவுக்கு கொண்டு வந்து, கட்சிகளின் பிடியிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் திரையுலகுக்கு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்