தமிழ் சினிமாவுக்கு ஆறுதல் அளித்த மார்ச் மாதம்

சனி, 2 ஏப்ரல் 2016 (12:57 IST)
மார்ச் மாதத்தில் 17 படங்கள் வெளியாகின. இதில் மூன்று படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 17 -இல் மூன்று வெற்றி என்பது ஒரு சாதனையா என்று தோன்றும்.


 

 


ஜனவரி மாதத்தில் ஒரேயொரு படம், ரஜினி முருகன் மட்டுமே வெற்றி பெற்றது. பிப்ரவரியில் வெற்றிப் படம் என்று எதுவும் இல்லை. முதலுக்கு மோசம் செய்யாதவை என்று விசாரணை, மிருதன், சேதுபதி படங்களைச் சொல்லலாம். இதை வைத்துப் பார்க்கையில் மார்ச்சில் பெற்றுள்ள மூன்று வெற்றிகள் மகத்தானவை.
 
மேலும், வருடந்தோறும் சராசரியாக 200 படங்கள் தமிழில் வெளியாகின்றன. இதில் ஏழே எட்டோ படங்கள்தான் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்த படங்களாக அமைகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


 
 
இந்த வருடம் வெளியான, காதலும் கடந்து போகும் பி,சி, சென்டர்களில் சுமாராகப் போனாலும் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. பிச்சைக்காரன் படம் அனைத்து சென்டர்களிலும் லாபத்தை தந்துள்ளது. சசிக்கு கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஹிட்.
 
கார்த்தியின் தோழா படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வசூலை அள்ளுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மார்ச் மாதத்தின் இந்த மூன்று வெற்றிகள் தமிழ் சினிமா வர்த்தகத்தை இன்னும் ஐசியு வுக்கு போகாமல் காத்திருக்கின்றன.


 
 
இதில் கவனிக்கதக்க ஒரு விஷயம், வித்தியாசமான களத்தில் எளிமையாக ஒரு கதையை யதார்த்தமாகச் சொன்னாலே வெற்றி பெற்றுவிட முடியும் என்பதை இந்த வெற்றிகள் உணர்த்துகின்றன. இன்னொரு விஷயம், இந்த மூன்று படங்களில் இரண்டு வெளிநாட்டு படங்களின் கதையை முறைப்படி வாங்கி எடுக்கப்பட்டவை. காதலும் கடந்து போகும் கொரியப் படமான, மை டியர் டெஸ்பரடோ. தோழா பிரெஞ்ச் படமான, த இன்டச்சிபிள்ஸ். 
 
வெளிநாட்டு படங்களை திருட்டுத்தனமாக தழுவும் போக்கை இந்தப் படங்கள் மட்டுப்படுத்தியிருப்பதுடன், முறைப்படி ரீமேக் உரிமை வாங்குவதற்கு முன்னோடியாகவும் அமைந்துள்ளன. அத்துடன், மனித உணர்வுகள் உலகம் முழுக்க ஒன்றுதான் என்பதை இந்தப் படங்களின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.
 
இனிவரும் மாதங்களிலும் இதுபோன்ற சென்சேஷனல் வெற்றிகளை தமிழ் சினிமா பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்