2014 - இல் தமிழ் சினிமா - சிறந்த படங்களும், வசூல் படங்களும்

ஜே.பி.ஆர்

வெள்ளி, 2 ஜனவரி 2015 (07:32 IST)
அனைத்துத் திரைப்படங்களும் ஏதோவொரு நோக்கத்திற்காகதான் எடுக்கப்படுகின்றன. அந்த நோக்கத்தை அவை நிறைவு செய்தனவா என்பதை வைத்தே அதன் வெற்றி கணக்கிடப்பட வேண்டும்.



 
2014 -இல் தமிழில் 207 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதில் 99 சதவீதப் படங்களின் நோக்கம் வசூல்ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதே. மீதி ஒருசதவீதம், வசூலுடன் நல்ல படம் என்ற பெயரும் வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டவை.
 
வசூல்ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட படங்களில் 95 சதவீதப் படங்கள் தங்கள் நோக்கத்தில் தோல்வியையே கண்டன.
 
அந்தவகையில் முந்தைய ஆண்டைப் போலவே தமிழ் சினிமா மண்ணை கவ்வியது என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி பெற்றவை சொற்பப் படங்கள்.
 
இந்த சொற்ப எண்ணிக்கையில் அஜீத், விஜய், ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களை கழித்துவிடலாம். அவர்களின் படங்கள் எவ்வளவு வசூலிக்கின்றன, யாருக்கு எவ்வளவு லாபம் என்பதெல்லாம் ஆழம் காண முடியாத ரகசியங்கள். 
 
உதாரணமாக, மாஸ் ஹீரோவின் படம் ஓடும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் என்றால், திரையரங்கில் 500 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
 
கணக்கில் வருவது 50 ரூபாய் மட்டுமே. டிக்கெட் கட்டணத்தில் தயாரிப்பாளருக்கு இவ்வளவு, திரையரங்குக்கு இவ்வளவு என்று ஷேர் செய்து கொண்டாலும் யாருக்கு எவ்வளவு லாபம் என்பதை வெளியிலிருந்து ஒருவரால் கணக்கிட முடியாது.
 
எனவே ஜில்லா, வீரம், கோச்சடையான், கத்தி, லிங்கா ஆகிய படங்களை நமது பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். மிஞ்சுவது கோலிசோடா, யாமிருக்க பயமே, மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, அரிமாநம்பி, சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, பிசாசு, வெள்ளக்காரதுரை ஆகிய படங்கள்.
 
இதில் மஞ்சப்பை...

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு லாபத்தை பெற்றுத் தந்தது. அதற்கு காரணம், படத்தின் மிகக்குறைவான பட்ஜெட். இன்னொரு படம் கோலிசோடா.
 
தனுஷின் வேலையில்லா பட்டதாரியும் மிக அதிகம் வசூலித்தது. சென்னை மாநகரில் கத்திக்கு அடுத்த இடத்தில் வேலையில்லா பட்டதாரி உள்ளது. லிங்கா இன்னும் இப்படத்தின் சென்னை வசூலை  தாண்டவில்லை.


 
மேலே உள்ள படங்கள் தவிர வேறு சில படங்களும் நஷ்டமடையாமல் தப்பித்தன. தெகிடி, மான் கராத்தே, சலீம், சிகரம் தொடு, மெட்ராஸ், திருடன் போலீஸ், நாய்கள் ஜாக்கிரதை ஆகியவை.
 
சமீபத்தில் வெளியான மீகாமன், கயல், கப்பல் படங்களும் இந்த பட்டியலில் இடம்பெறும் சாத்தியமுள்ளது. வாயை மூடி பேசவும், ஜிகிர்தண்டா ஆகிய படங்களும் முதலுக்கு மோசம் செய்யவில்லை. இவை தவிர்த்த பிற படங்கள் தங்கள் நோக்கத்தில் தோல்வி கண்டவை.
 
வசூலுடன் பெயரும் வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டது இனம், ராமானுஜன், காவியத்தலைவன் ஆகிய படங்கள். இந்த மூன்றுமே தங்களின் இரு நோக்கங்களிலும் தோல்வியை கண்டன. முப்பதுகளின் நாடக உலகம் என்ற கமர்ஷியல் வேல்யூ குறைவான ஒரு கதைக்கு வசந்தபாலன் 24 கோடிகள் செலவளித்தது, பெரும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். 
 
வசூலை தள்ளி வைத்து 2014 -இல் வெளியான சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் சின்ன படங்களே முதலில் வருகின்றன. கோலிசோடா, சதுரங்க வேட்டை, சலீம், ஜிகிர்தண்டா, மெட்ராஸ் மற்றும் பிசாசு.
 
தலித் அரசியலை முன்னிறுத்தி மெட்ராஸை சிலர் தூக்கிப் பிடித்தாலும் அதன் சட்டகம் கமர்ஷியல் சினிமாவுக்குள்பட்டே இருந்தது. சுவர் என்ற குறியீடும், வடசென்னை மக்களின் பேச்சு வழக்கை இயல்பாக காட்டியதும், நடிகர்களை யதார்த்தமாக நடிக்க வைத்ததும் இந்தப் படத்துக்கு புதியதொரு வண்ணத்தை தந்தது. ஆனால் உள்ளடக்கம் நாம் பார்த்து பழகியது.
 
மேலே உள்ள ஆறு படங்களில் ஜிகிர்தண்டா, சதுரங்க வேட்டை இரண்டையுமே முதன்மைப்படுத்தி பேச வேண்டியுள்ளது. இந்த இரு படங்களும் வழக்கமான தமிழ் சினிமா சட்டகத்துக்குள்ளிலிருந்து கொஞ்சமேனும் மாறுபடுபவை. இவ்விரு படங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த ஆண்டு சில படங்களாவது வருமாயின் அது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்