ரோஷன் ஆண்ட்ரூவிடமிருந்து கற்றுக் கொள்வோம்

ஜே.பி.ஆர்

திங்கள், 6 ஏப்ரல் 2015 (10:00 IST)
ரோஷன் ஆண்ட்ரூ மலையாளத்தின் முக்கியமான இயக்குனர். 14 வருடங்களுக்குப் பிறகு மஞ்சு வாரியர் நடித்த, ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை இயக்கியவர். அந்தப் படத்தை 36 வயதினிலே என்ற பெயரில் தமிழில் ரோஷன் ஆண்ட்ரூவே இயக்கியுள்ளார்.
 

 
தமிழ்ப் படங்களுக்கு சவாலாக இருப்பவைகளில் முக்கியமானது அனாவசிய செலவுகளை கொண்ட பட்ஜெட். அதில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆடம்பர செலவுகள் கணிசமாக இருக்கும். அதனை குறைத்தாலே பல தயாரிப்பாளர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
 
மலையாள சினிமாவில் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் அதிகம் விரயம் செய்வதில்லை. மலையாள சினிமாவின் சந்தை மிகச்சிறியது. அதற்கு உள்பட்டு படம் எடுத்தால் மட்டுமே சிறிதளவு லாபம் பார்க்க முடியும். அதனால் சிக்கனம் அவர்களிடம் இயல்பாக ஊறியது.
 
36 வயதினிலே படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது. தமிழ் வசனங்களை சரிபார்க்க மட்டும் இங்கிருந்து ஒரு உதவி இயக்குனரை வைத்துக் கொண்டார் ரோஷன் ஆண்ட்ரூ. மற்றவர்கள் அவரது ஆஸ்தான உதவி இயக்குனர்கள், மலையாளிகள். 
 
ஒரு படம் தயாராகிறது என்றால் முதலில் ஆபிஸ் போடுவார்கள். தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கனவே அலுவலகம் இருந்தாலும் பல லட்சங்கள் முன்பணம் தந்து ஒரு ஆபிஸ் வாடகைக்கு எடுக்கப்படும். ரோஷன் ஆண்ட்ரூ அலுவலகம் தேவையில்லை என்றிருக்கிறார். நானும், அசிஸ்டெண்டும் தங்கியிருக்கிற ஹோட்டலில் இருந்து நேரா ஸ்பாட்டுக்கு வந்திடறோம் என்றிருக்கிறார்.
 
எடுக்கப் போற காட்சியைப் பற்றி எங்கே டிஸ்கஷன் செய்வீர்கள்?
 
ஏற்கனவே எடுத்தப் படம்தானே. அடுத்த நாள் எடுக்கப் போவதை முந்தைய நாள் ஸ்பாட்டில் டிஸ்கஷ் செய்தால் போதும்.
 
அதிகாலையில் எழுந்து, ஆறு மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ரோஷன் ஆண்ட்ரூ ஆஜராகிவிடுவார். ஆர்டிஸ்ட் வரலையா? கேமராவை எடுத்திட்டு ரோட்டுக்குப் போவோம், பாஸிங் ஷாட்ஸ் எடுப்போம் என்று காலையிலேயே படப்பிடிப்பு சுறுசுறுப்படையும். இரவு இரண்டு மணிவரைகூட படப்பிடிப்பு தொடரும்.
 
ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் கதை ரோஷன் ஆண்ட்ரூவுடையது. அதனால் காட்சிகள் மனப்பாடம். டெல்லி காட்சியை திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்பே எடுத்திருக்கிறார். மொத்தப் படப்பிடிப்பும் முப்பது நாள்களுக்குள் முடிந்திருக்கிறது. 24 தினங்கள் என்று கேள்வி.
 
அதேபோல் கமலை வைத்து பாபநாசம் படத்தை 29 தினங்களில் முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். 
குறைவான தினங்களில் படத்தை முடிக்க மலையாள இயக்குனர்களால் எப்படி முடிகிறது?
 
வெற்று ஆடம்பரம் இல்லை. ஸ்கிரிப்ட் முழுமையாக எழுதப்பட்டு கையில் வந்த பிறகே படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். அதனால், அடுத்து என்ன எடுக்க வேண்டும் என்ற குழப்பமில்லை. ஒரு நடிகர் வரவில்லை என்றால், இருப்பவர்களை வைத்து என்ன காட்சியை எடுக்கலாம் என்பது தெரிந்திருக்கும். அனாவசியமாக இரண்டு மூன்று ஷெட்யூல்கள் வைப்பதில்லை. ஒரே ஷெட்யூல்டில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும். 
 
அரைகுறை ஸ்கிரிப்டுடன், என்னை அறிந்தால் படப்பிடிப்புக்கு கிளம்பினார் கௌதம். படத்தின் முதல் பாதிக்கு மட்டும் அவர் 90 நாள்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நிச்சயம் ஐம்பதுக்கு குறைவாக இருக்காது. அதிக நாள் படப்பிடிப்பால் பட்ஜெட் எகிறியது. ஸ்கிரிப்ட் கையில் இல்லாததால் நாள்கள் அதிகமானதுடன், காட்சிகளும் வெட்டி ஒட்டியது போல் சிங்க் ஆகாமல் இருந்தன. 
 
முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்புவது, பாதுகாப்பில்லாமல் நீச்சல் பழகுவதுக்கு சமம். படமும், பணம் போட்ட தயாரிப்பாளரும் மூழ்குவது நிச்சயம். அஜீத்தால் என்னை அறிந்தால் தப்பித்தது. இதுவே வேறு ஒருவர் நடித்திருந்தால்...?
 
முழுமையான ஸ்கிரிப்டுடன் நான் ஸ்டாப்பாக படப்பிடிப்பு நடத்தினால் பல கோடிகளை சிக்கனப்படுத்தலாம். அதற்கு ரோஷன் ஆண்ட்ரூ சிறந்த உதாரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்