வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் படங்களின் ஹிட் சிவ கார்த்திகேயனை ஒரேயடியாக உயரத்தில் தூக்கி வைத்தது. ரஜினியை இமிடேட் செய்யும் அவரது மேனரிசங்களும், டயலாக் டெலிவரியும் மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற மிகச்சுமார் படங்களையும் ஓட வைத்தது. என்னுடைய தம்பி என தனுஷால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இன்று தனுஷைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறார். இதுதான் அவருக்கு முதல் பகையை ஏற்படுத்தியது.
'என்னை தூக்கிவிட்டார்கள் என்பதற்காக குட்ட குட்ட குனிய முடியாது' என்று ஒன்றல்ல இரண்டு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் சிவ கார்த்திகேயன். அவர் சொல்வது தனுஷையா, விஜய் தொலைக்காட்சியா என்ற பட்டிமன்றம் ஓடுகிறது. யாராக இருப்பினும் சிவ கார்த்திகேயன் தனி வழியை தேர்வு செய்துவிட்டார்.
சிவ கார்த்திகேயனின் வெற்றியால், அவரது காட்பாதர் என்று நினைத்துக் கொண்டிருந்த தனுஷுக்கு பிரமாண்ட வெற்றி தேவைப்பட்டது. அதற்கேற்ப வேலையில்லா பட்டதாரியும் அமைந்தது. ஆனாலும், அதே பிளேவரில் அவர் நடித்த மாரியும், தங்கமகனும் காலை வாரியது. சிவ கார்த்திகேயனின் சுமார் படங்கள் வெற்றிபெற, அதேதரத்தில் வெளிவந்த தனுஷின் படங்கள் தோல்வியடைந்தன. சிவ கார்த்திகேயனுக்கு எதிராக படைதிரட்ட விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடிதான் படத்தை எடுத்தார் தனுஷ். ஆனால், இவையெல்லாம் சிவ கார்த்திகேயனின் மாஸை அணைபோடுவதாயில்லை.
தனுஷின் கொடி படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. அனிருத் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டதால் அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மை வேறு. சிவ கார்த்திகேயனின் சொந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதால்தான் அனிருத்தை தனுஷ் விலக்குகிறார். அந்தளவு பகை மூண்டிருக்கிறது.