கார்ப்பரேட் கம்பெனிகள் படம் தயாரிக்க வந்தால் தமிழ் சினிமாவில் பாலும் தேனும் பாய்ந்தோடும் என்றவர்கள் என்ன ஆனார்கள் தெரியவில்லை. தமிழ் சினிமாவை ஆள வந்த யுடிவி நிறுவனம், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்துள்ளது.
பெரிய நடிகர்களுக்கு அதிக சம்பளம் தந்து வளைத்துப் போடுவது, கட்டுப்பாட்டை மீறி விளம்பரம் செய்வது என யுடிவி எடுத்த உடனேயே பாய்ச்சல் காட்டியது. இந்த பாய்ச்சலுக்கு ஏத்த கரன்சி வரவில்லையெனில் விரைவிலேயே மூச்சிரைக்கும் என்ற உண்மை அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
2011 -இல் அவர்கள் தயாரித்த, தெய்வத்திருமகள் படம் ஹாலிவுட்டின், ஐ யம் சாம் படத்தின் காப்பி என்பது சர்ச்சையை உருவாக்கியது. சில இணைய போராளிகள் இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். வழக்கு தொடராதிருக்க, ஹாலிவுட் நிறுவனத்துக்கு லம்பாக ஒரு தொகையை யுடிவி தந்தது என்கிறார்கள். படமும் பிளாப் என்பது தனிக்கதை.
ட்ரீம் தியேட்டர்ஸுடன் இணைந்து யுடிவி தயாரித்த, முரண் படம், ஹிட்ச்காக்கின், ஸ்ட்ரேஞ்சர் ஆன் ஏ ட்ரெய்ன் திரைப்படத்தின் தழுவல். அப்படமும் பெரிதாகப் போகவில்லை. அடுத்து மாதவன், ஆர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை படத்தை எடுத்தனர். படம் பாக்ஸ் ஆபிஸில் பப்படமானது.
முகமூடி, தாண்டவம், சேட்டை என தொடர் தோல்விகள். நடுவில், அவ்னி சினிமேக்ஸுடன் இணைந்து தயாரித்த கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்கள் மட்டும் ஆறுதலளித்தன. விஷாலுடன் இணைந்து தயாரித்த நான் சிவப்பு மனிதனும் தோல்வி மாதிரிதான்.
தொடர் தோல்விக்குப் பிறகு, படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்தை தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். அடி விழுந்தாலும் ஷேர் செய்ய ஆள் இருக்கிறதே என்ற அவர்களின் எண்ணமும் ஈடேறவில்லை.
அஞ்சான் படத்தை லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்தனர். டீஸரை சில லட்சம் பேர் பார்த்தனர் என்றதற்கே தனஞ்செயனும் மற்றவர்களும் விழா எடுத்து கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டி மகிழ்ந்தனர். படம் மரண அடி. ஜனநாதனுடன் இணைந்து தயாரித்த புறம்போக்கும் பாக்கெட்டில் கோடு போட்டது. விஷ்ணுவர்தனுடன் இணைந்து தயாரித்த யட்சனும் பிளாப்.
வேட்டை படம் ப்ளாப் என்பது உறுதியானதும், வேட்டை படத்தைப் பார்த்த யுடிவி ஓனர் அப்படியே மெர்சலாயிட்டார். உடனே இந்தியில் வேட்டையை தயாரிக்க முடிவு செய்துவிட்டார். இதோ லிங்குசாமி படத்தை இயக்க பிளைட் ஏறிட்டார் என்றெல்லாம் பில்டப் தந்தனர். என்னவாயிற்று?
வேட்டை என்றால் லிங்குசாமியே திரும்பிப் பார்க்க மாட்டார். இதே உளுத்துப்போன டெக்னிக்கைதான் யட்சனின் போதும் கையாண்டனர். யட்சனை இந்தியில் எடுக்கப் போகிறார்கள் என. ரசிகர்கள் என்ன முட்டாள்களா? இவர்களின் பில்டப்புகளை நம்ப.
கதை, திரைக்கதையை நம்பாமல் ஹீரோக்களை நம்பியது, வெற்று ஆடம்பரம், அடுத்தவர் கதையை முறையற்று திருடியது என யுடிவி அதன் மானம் மரியாதையுடன் கரன்சியையும் கணிசமாக இழந்து, தமிழ்ப் படங்களை தயாரிப்பதையே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கார்ப்பரேட்டோ தனியாளோ... முறையில்லாமல் வியாபாரம் செய்தால் கடவுளே ஆனாலும் காப்பாற்ற முடியாது.