நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

வியாழன், 13 நவம்பர் 2014 (14:10 IST)
லிங்கா, ஐ, அனேகன் மூன்றும் எப்போது வேண்டுமானாலும் திரைக்கு வரலாம். கிடைக்கிற இடைவெளியில் எப்படியாவது ஓடி தப்பிப்பது என்ற கதவிடுக்கில் சிக்கிய எலி மனநிலையில் இருக்கிறார்கள், சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள். விளைவு...?
 
இந்த வாரமும் அடுத்த வாரமும் புற்றீசலாக புறப்படுகின்றன படங்கள். இந்த வாரம் மட்டும் நேரடித் தமிழ்ப் படங்கள் ஏழு வெளியாகின்றன.
இதில் குறிப்பிடத்தகுந்த படம், திருடன் போலீஸ். ஓரளவு சென்சிபிள் படங்களை மட்டும் தயாரிப்பவர் எஸ்.பி.பி.சரண். திருடன் போலீஸிலும் அந்த சென்சிபிளிட்டியை தவறவிட்டிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை. அட்டகத்தி தினேஷ் ஹீரோ. கதைப்படி திருடன். நாயகி ஐஸ்வர்யா போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள். ஸீஜி வேலைகளில் திறமைசாலியான கார்த்திக் படத்தை இயக்கியுள்ளார். 
 
நிதின் சத்யா, பால சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகிய நால்வருக்கும் முக்கியமான வேடம். ராஜேஷுக்கு பொறுப்பில்லாத மகனின் கண்ணியமான தந்தை வேடம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆரண்யகாண்டம் படத்திற்காக போட்ட ஒரு பாடலை இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
திருடன் போலீஸ் கதைகளுக்கு இயல்பிலேயே ஒரு மிக்கி மவுஸ் சுவாரஸியம் இருப்பதால் படம் ஏமாற்றாது என்பது திரையுலகினாpன் நம்பிக்கை. 
நாளை வெளியாகும் படங்களில் ஒன்று, பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்த முருகானந்தம் இயக்கியிருக்கும் முருகாற்றுப்படை. படத்தை தயாரித்திருக்கும் சரவணனே ஹீரோ. மேலும், வி.எஸ்.ராகவன், ரமேஷ் கண்ணா, ஜெயந்த், சின்னசாமி, பட்டு மாமி, தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
படத்தின் கதையை பதுக்கி வைக்கும் பழக்கம் முருகானந்தத்துக்கு இல்லை. மொத்த கதையையும் படத்தை அறிவித்த போதே வெளியிட்டுவிட்டார்.
 
ஹீரோ தொழிலதிபரின் மகன். கல்லூரி பேருந்தில் தினமும் பயணிப்பவன் அரசுப் பேருந்தில் கலை கல்லூரி மாணவர்கள் அடிக்கும் லூட்டியால் ஈர்க்கப்பட்டு அரசுப் பேருந்தில் பயணிக்க ஆரம்பிக்கிறான். அதில் கலை கல்லூரி மாணவன் நட்பாகிறான். இரு கல்லூரிகளுக்குமிடையிலான போட்டி பொறாமைகள் முடிவுக்கு வருகிறது.
 
இந்நிலையில் ஹீரோவின் தொழிலதிபர் தந்தைக்கு ஒரு பிரச்சனை வர, இரு கல்லூரி மாணவர்களின் உதவியுடன் அதனை ஹீரோ தீர்த்து வைக்கிறான்.
 
பாடகர் கணேஷ் ராகவேந்திரா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் போட்ட முதலை எடுத்தாலே பெரிய வெற்றிதான்.

நாளை வெளியாகும் இன்னொரு படம், டேனியல் பாலாஜி நடித்துள்ள ஞான கிறுக்கன். ஜகராஜ், அர்ச்சனா கவி, சுஷ்மிதா, பசங்க செந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளைய தேவன் படத்தை இயக்கியுள்ளார்.
 
படம் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா, ஞான கிறுக்கன் படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப் போல் ஒப்பனை எதுவுமின்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக்கியிருக்கிறார் என்றார்.
தாஜ்நூர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்கள் தமிழில் அதிகம் எடுக்கப்படுவதில்லை. அதிகம் என்பதெல்லாம் சும்மா பேச்சுக்கு. சுத்தமாக இல்லை என்பதுதான் உண்மை. அந்தக்குறையை போக்க வெளியாகிறது அப்புச்சி கிராமம்.
 
முருகதாஸின் அசிஸ்டெண்ட் வி.ஐ.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடித்துள்ளனர். கஞ்சா கருப்பு, சுஜா, சுவாசிகா, சிங்கம்புலி, ஜி.எம்.குமார் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். 
 
இன்னும் எட்டு தினங்களில் விண்வெளி கற்கள் பூமியை தாக்கி அழிக்கப் போகின்றன என சர்வதேச விண்வெளி மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அதனை கேட்கும் வெள்ளந்தியான மனிதர்கள் வாழும் அப்புச்சி கிராமத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, அவர்கள் அந்த எட்டு தினங்களில் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதை படம் சொல்கிறது.
 
கடன் கொடுத்தவன் அதனை திருப்பி கேட்காமல் விட்டு விடுகிறான். காதலிக்க மறுத்தவள் காதலிக்க ஆரம்பிக்கிறாள். பகை முற்றிலுமாக மறைந்து அன்பு வழிந்தோடுகிறது. அறிவியலின்வழி அன்பை சொல்வதுதான் இந்தப் படமாம். 
 
தீபாவளிக்கு வருவதாக இருந்த புலிப்பார்வை படமும் நாளைதான் திரைக்கு வருகிறது. இவை தவிர விலாசம், அன்பென்றால் அம்மா படங்களும் நாளை வெளியாகின்றன.
 
ஏழு படங்களில் இரண்டாவது லாபம் பார்த்தால் சாதனைதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்