கபாலி புயல் ஓய்ந்தது.... களத்தில் குதிக்கும் திரைப்படங்கள்

புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:26 IST)
கபாலி படம் வெளியானதால் தங்கள் படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைத்திருந்தனர் பிற தயாரிப்பாளர்கள். புயலில் சிக்கி சின்னாபின்னமாக யார்தான் விரும்புவார்கள்.


 
 
இந்த வருடம் தமிழ் சினிமாவின் உற்பத்தி அமோகம். மாதத்துக்கு 20 முதல் 25 படங்கள் வெளியாயின. கபாலி வெளியான ஜுலை 22 -க்குப் பிறகு மொத்தம் இரண்டேயிரண்டு படங்கள்தான் வெளியாயின. அதுவும் பெயர் தெரியாத இரண்டு சின்னப் படங்கள். மற்றபடி எந்தப் படமும் திரையரங்கில் எட்டிப் பார்க்கவில்லை.
 
கபாலியின் புயல் வேகம் சற்று தணிந்திருக்கிறது. வரும் வாரம் அது இன்னும் குறையும் என்பதால் காத்திருந்த பல படங்கள் திரையில் தலைகாட்ட துணிந்திருக்கின்றன. அதாவது வரும் வெள்ளிக்கிழமை.
 
திருநாள், மீண்டும் ஒரு காதல் கதை, தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், சண்டி குதிரை, காதல் காலம், என்னமா கதவுடுறானுங்க அதில் சில. இன்னும் அரை டஜன் படங்கள் திரைக்குவர திமிறிக் கொண்டுள்ளன. ஆனால், திரையரங்குகள் வேண்டுமே.
 
இவை தவிர மோகன்லால், கௌதமி நடித்த தெலுங்குப் படம், நமது என்ற பெயரில் டப்பாகி தமிழில் வெளியாகிறது. முக்கியமாக ஹாலிவுட் படமான ஜேஸன் பார்ன் வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. ஆக்ஷன்பட ப்ரியர்கள் பார்ன் சீரிஸின் மூன்று பாகங்களையும் பார்த்து வெறியேறிப் போயுள்ளனர். ஜேஸன் பார்ன் படம் எப்போது வெளியாகும், பார்க்கலாம் என்று காத்திருக்கின்றனர். அதனால், சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஜேஸன் பார்ன் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
 
நேரடித் தமிழ்ப் படங்களில் குறைந்தது ஐந்தேனும் ஆகஸ்ட் 5 வெளியாகும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
 
ஆகஸ்ட் 12 -ஆம் தேதி முன்னணி நடிகர்களின் படங்கள் பல வெளியாக உள்ளதால் சின்னப் படங்கள் ஆகஸ்ட் 5 -ஐ பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றன. அதனால்தான் இந்த நெருக்கடி.
 
படம் எடுப்பதைவிட அதனை வெளியிடுவதுதான் இன்றைக்கு தமிழ் சினிமாவில் மிக கடினம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்