ஜுராஸிக் வேர்ல்டின் உலக வசூல் சாதனை - ஒரு பார்வை

ஜே.பி.ஆர்

செவ்வாய், 16 ஜூன் 2015 (11:10 IST)
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜுராஸிக் வேர்ல்ட் உலக அளவில் சில வசூல் சாதனைகளை புரிந்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் உலகம் முழுவதும் 3280 கோடிகளை வசூல் செய்து, முதல் மூன்று தின ஓபனிங் வசூலில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
ஜுராஸிக் வேர்ல்ட் யுஎஸ்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை 4,274 திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 204 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது. நேற்று திங்கள்கிழமை, படத்தின் யுஎஸ் வசூல் 204 அல்ல 208.8 மில்லியன் டாலர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 

 
த அவெஞ்சர்ஸ் படம் முதல் மூன்று தினங்களில் 207.4 மில்லியன் டாலர்கள் வசூல் செய்ததே இதுவரை யுஎஸ்ஸின் சிறந்த ஓபனிங் வீக் எண்ட் வசூலாக இருந்தது. அதனை இப்படம் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் முதல் மூன்று தினங்களில் இப்படம் 315.6 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் ஓபனிங் வீக் எண்ட் சாதனையுடன் முதலிடத்தில், ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 படம் இருந்தது. 314 மில்லியன் டாலர்கள் என்ற அதன் வசூல் சாதனையை ஜுராஸிக் வேர்ல்ட் (315.6) முறியடித்துள்ளது. 

மொத்தமாக உலக அளவில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 500 மில்லியன் டாலர்களை கடந்து வசூலித்துள்ளது. உலக சரித்திரத்தில் ஒரு படம் மூன்று தினங்களில் 500 மில்லியன் டாலர்களை கடந்தது இதுவே முதல்முறை.
இந்த பிரமாண்ட வசூல் காரணமாக, உலக அளவில் அதிகம் வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் அவதாரின் சாதனையை ஜுராஸிக் வேர்ல்ட் முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
2009 -இல் வெளியான அவதார் யுஎஸ்ஸில் மட்டும் 760.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. யுஎஸ் தவிர்த்து பிற நாடுகளில் 2,027.5 மில்லியன் டாலர்கள். மொத்தம் 2,788 மில்லியன் டாலர்கள். அதாவது இரண்டே முக்கால் பில்லியன்கள்.
 
இதற்கு அடுத்த இடத்திலும் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படமே உள்ளது. உலக அளவில் இப்படம் 2,186.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 
மூன்றாவது இடத்தில் உள்ள த அவெஞ்சர்ஸ் இவற்றைவிட மிகக்குறைவாகவே - 1,518.6 மில்லியன் டாலர்கள் - வசூலித்துள்ளது. அதனால் அவதாரையோ இல்லை டைட்டானிக்கையோ ஜுராஸிக் வேர்ல்ட் எட்டிப் பிடிப்பது எளிதல்ல. ஒருவேளை அப்படி நடந்தால் அது மகத்தான வெற்றியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்