ஒரே படம் ஜெயமோகனுக்கு அபத்தமாகவும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் அற்புதமாகவும் தெரிவது ஏன்?

ஜே.பி.ஆர்.

வெள்ளி, 8 ஜனவரி 2016 (21:06 IST)
எழுத்தாளர்களின் விமர்சனத்தை எவ்வளவு தூரம் எடுத்துக் கொள்ளலாம்? ஒருவர் ஒரு படத்தை பரவாயில்லை என்றால் இன்னொருவர் ரொம்ப நல்லாயிருக்கு என்பார். இதனை புரிந்து கொள்ளலாம்.
 

 

ஒருவர் அற்புதம் என்றதை இன்னொருவர் அபத்தம் என்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? இந்த இரு எழுத்தாளர்களில் யார் சொல்வதை வாசகன் எடுத்துக் கொள்வது? இந்த இருவருமே நேரடியாக சினிமாவில் பங்கு கொள்கிறவர்கள் என்றவகையில் இவர்களின் சினிமா ரசனையை எப்படி வகைப்படுத்துவது?
 
இதற்கெல்லாம் பதில் எழுதினால் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைவிட அதிக பக்கங்கள் தேவைப்படும். நாவலைப் போலவே கடைசிவரை எதையும் கண்டடையவும் முடியாது.
 
பாஜிராவ் மஸ்தானி படத்தை தனது மகனுடன் பார்த்த அனுபவத்தை தனது தளத்தில் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதை முதலில் பார்ப்போம்.
 
"நான்கு மணிநேரம் பெங்களூரில் பஸ்காத்து நிற்க வேண்டியிருந்தது. ஆகவே ஒரு சினிமாவுக்குச் சென்றோம். பாஜிராவ் மஸ்தானி என்னும் படம். அபத்தமான படம் . ஆபாசமான வரைகலைக்காட்சி. பாகுபலி படத்தை பன்ஸாலியிடம் ஒரு ஐம்பதுமுறை பார்க்கச் சொல்ல வேண்டும். சினிமாக்கலை தெரிந்தவர்கள்  மஸ்தானியின் வரைகலைக் காட்சிகளை அமெச்சூர்தனத்தின் உச்சம் என்றே சொல்வார்கள். இன்று அசையும் காட்சிகளையே எளிதாக வெட்டி ஒட்ட முடியும். இவர்கள் காட்சிகளை கணிப்பொறியில் உருவாக்கி ஒட்டியிருக்கிறார்கள். படையெடுப்புக் காட்சிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒளியில் ஒட்டப்பட்டுள்ளன.
 
மஸ்தானி முஸ்லிம், அந்தப்புரப்பெண். சபையில் கிளப் டான்ஸ் மாதிரி ஆட்டி ஆட்டி ஆடுகிறார். அதைவிட கொடுமை ஆண்மைக்கும் போர் தந்திரத்திற்கும் புகழ்பெற்ற வரலாற்று நாயகரான பாஜிராவ் லுங்கி டான்ஸ் குத்துப்பாட்டு நடனம் ஆடுவதுதான். சமீபத்தில் இப்படி ஒரு கேனப்படம் பார்த்ததில்லை. வாந்தி எடுக்க வைக்கும் அசட்டுத்தனம்.  இடைவேளையில் தப்பி ஓடிவிட்டோம்."
 
ஜெயமோகனை வாந்தி எடுக்க வைத்த, இடைவேளையில் தப்பி ஓட வைத்த, கேனப்படத்தை இன்னொரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். வாங்க அதையும் பார்ப்போம்.
 
"பாஜிராவ் மஸ்தானி இந்திய பொழுதுபோக்கு சினிமாவின் பெரும் சாதனை.   பிரம்மாண்டம் என்பது வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமில்லை, எடுத்துக் கொள்ளும் கதைக்களம்,  அதற்கான பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், நடிப்பு, ஆடல் பாடல்கள், சிறந்த ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் என அத்தனையிலும் சாதனை செய்திருக்கிறார்  சஞ்சய் லீலா பன்சாலி.
 
மொகலே ஆசம் படம் கடந்த கால இந்திய சினிமாவின் பெருமை என்றால் பாஜிராவ் மஸ்தானி  நிகழ்கால இந்திய சினிமாவின் பெருமை.
 
படம் மெதுவாகப் போகிறது. பல இடங்கள் தொய்வாக உள்ளது, அதிகபட்ச அலங்காரத்துடன் உருவாக்கபட்டிருக்கிறது என சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அப்படி எதையும் நான் உணரவில்லை. ஒரு வரலாற்று திரைப்படத்தை இப்படி தான் உருவாக்க முடியும். இந்த வரலாற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பது படைப்பாளியின் சுதந்திரம்."
 
- இப்படி தனது நீண்ட விமர்சனம் முழுவதும் படத்தையும், படத்தை இயக்கிய பன்சாலியையும் புகழ்கிறார் எஸ்.ரா. சீன விளக்குகளையும், ஆடை அலங்காரங்களையும் அதிக அளவில் பயன்படுத்தியது மட்டுமே படத்தில் அவர் காணும் ஒரே குறை. கடைசியில் இப்படி விமர்சனத்தை முடிக்கிறார்.
 
"படம் முடிந்தபிறகு அரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுவதை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டேன்.
 
பாஜிராவ் மஸ்தானி தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்."
 
ஜெயமோகன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பங்களிப்பு செலுத்தி வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் தாரை தப்பட்டை, ரஜினியின் 2.0 இரண்டு படங்களிலும் அவர்தான் கதை, திரைக்கதை, வசனத்தில் பெரும் பங்காற்றியுள்ளார். எஸ்.ராவும் அப்படியே. இவர்களில் ஒருவர் ஒரு படத்தை அபத்தம் எனச் சொல்ல ஒருவர் அற்புதம் என்கிறார்.
 
பார்வையாளர்கள்தான் எது சரி என்று சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்