மாஸ் படத்தில் யுவனுக்குப் பதில் தமன் - குற்றம் நடந்தது என்ன?

ஜே.பி.ஆர்

வெள்ளி, 20 மார்ச் 2015 (10:35 IST)
வெங்கட்பிரபு படம் இயக்குகிறார் என்றால் அந்தப் படத்தில் கண்டிப்பாக இடம்பெறுகிறவர்கள் என சிலர் இருக்கிறார்கள். அவரது தம்பி நடிகர் பிரேம்ஜி அமரன், காஸ்ட்யூம் டிஸைனர் வாசுகி பாஸ்கர், கேமராமேன் சக்தி சரவணன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இந்த நால்வரும் இதுவரை எந்தப் படத்தையும் சொதப்பியதோ, ஏன் இவர்கள் என்று யோசிக்க வைத்ததோ இல்லை. முதல்முறையாக மாஸ் படத்தில் சக்தி சரவணனுக்குப் பதில் ஆர்.டிராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் அதன் முழு கட்டுப்பாடும் அந்நிறுவனத்தின் வசமே இருக்கும். அதாவது சிவகுமாரின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில். மாஸ் படத்தைப் பொறுத்தவரை சூர்யாதான் எல்லாம். வெங்கட்பிரபுவின் விருப்பத்துக்கு மாறhக ஆர்.டிராஜசேகரை மாஸில் இடம்பெறச் செய்ததாக படம் ஆரம்பித்த போதே முணுமுணுப்புகள் கேட்டன.
 
இந்நிலையில் படத்தின் ஒரு பாடலை மட்டும் தமன் உருவாக்கியிருக்கிறார் என்றனர். எந்த இசையமைப்பாளரும் தனது படத்தில் இன்னொரு இசையமைப்பாளர் இசை பங்களிப்பு செலுத்துவதை விரும்புவதில்லை. யுவன் எப்படி இதற்கு சம்மதித்தார்? பிரியாணியில் ஒரு பாடலை யுவனுடன் இமான், தமன், ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆயியோர் இணைந்து பாடினார்கள். அதேபோல் தமனுக்கு யுவன் ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாம் என்றே முதலில் அனைவரும் நினைத்தனர். ஆனால், விஷயம் அப்படியில்லை.
 
யுவன் இசையமைத்த ஒரு பாடல் சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் தமனிடம் ஒரு பாடலை மட்டும் கம்போஸிங் செய்யும் பொறுப்பை தந்திருக்கிறார். அவரும் இந்திப் படம் ஒன்றின் ட்யூனை உருவி சூர்யாவுக்கு பிடித்த மாதிரி இசையமைத்துள்ளார். இந்த விஷயம் பிறகே யுவனுக்கு தெரிய வந்தது.

மாஸ் படத்தின் இசையமைப்பாளர் யுவனா தமனா என மீடியாவில் கேள்வி எழுந்ததும், யுவன் இஸ் அவர் மியூஸிக் டைரக்டர் என வெங்கட்பிரபு ட்வீட் செய்தார். தமனை மாஸுக்குள் கொண்டு வந்ததை அவர் விரும்பவில்லை என்பதை இந்த ட்வீட் உறுதிசெய்தது.
 
சூர்யாவுடன் வெங்கட்பிரபு

தான் இசையமைக்கும் படத்தில் தன்னுடைய கவனத்துக்கு வராமல் வேறொரு இசையமைப்பாளரை பயன்படுத்தியதால் அதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் ஆளான யுவன், மாஸ் படத்தின் பின்னணி இசையை அமைக்கப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமனை வைத்தே பின்னணி இசையை செய்து கொள்ளலாம் என சூர்யா முடிவு செய்துள்ளாராம். 
 
யுவன் போன்ற ஒரு இசையமைப்பாளருக்கு எதிராக சூர்யா செயல்படுவது ஆச்சரியமில்லை. அவர்கள் இதைவிட பெரிதெல்லாம் செய்யக் கூடியவர்கள். ஆனால், தமன் எப்படி டபுள் கிராஸுக்கு ஒத்துக் கொண்டார்?
 
சிவகுமார் குடும்பத்துக்கும், அவர்களின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கும் அற்புதமான இசையை தந்து அவர்களை உயர்த்தியவர் யுவன். நந்தா, மௌனம் பேசியதே, பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல படங்களின் வெற்றியில் யுவனின் இசையின் பங்கு கணிசமானது. பையா படத்தை அதன் இசையையும், பாடல்களையும் தவிர்த்து சொல்ல முடியுமா? 
 
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சனை எல்லாமே வெங்கட்பிரபு அண்ட் டீமின் வழக்கமான செட்டப்தான், அவர்களே அந்த புதிரின் முடிச்சை விரைவில் அவிழ்ப்பார்கள் என்றொரு பேச்சும் உள்ளது. 
 
எப்படியோ... மாஸுக்கு நல்ல விளம்பரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்