தயாரிப்பாளர்களாகும் நடிகர்கள், இயக்குனர்கள் - பாகம் 1

வியாழன், 16 அக்டோபர் 2014 (15:37 IST)
நடிகர்களும், இயக்குனர்களும் தொன்று தொட்டே படம் தயாரித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அந்தக்கால நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் வைத்திருந்தனர். தங்களது தயாரிப்பில் அவர்களே நடித்தனர்.
படம் தயாரிப்பது சூதாட்டமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நடிகர்களும், இயக்குனர்களும் படம் தயாரிக்க முன்வருவது வரவேற்கப்பட வேண்டிய ஆரோக்கியமான நிகழ்வு. அதேநேரம் இந்த மாற்றத்தால் ஏற்படும் அதிகார மாற்றங்களையும் அதன் பின்னால் செயல்படுகிற அரசியலையும் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
 
சுமாராக 138 படங்கள் நடித்த எம்.ஜி.ஆர். தயாரித்த படங்களின் எண்ணிக்கை நான்கு. 282 படங்கள் நடித்த சிவாஜி கணேசன் சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த படங்கள் 11. இதில் ஒன்பது திரைப்படங்கள் மட்டுமே சிவாஜி நடித்தவை (பிரபு நடித்தப் படங்களை இதில் சேர்க்கவில்லை).


ஒரு கதை பிடித்து, அதனை தயாரிக்க மற்றவர்கள் முன் வராத போது அல்லது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அன்று நடிகர்கள் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தயாரிப்பு இன்னொருதுறை என்ற வரையறை அன்று தீர்க்கமாக இருந்தது.
 
இன்று நான்குப் படங்கள் நடிப்பதற்குள் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறிவிடுகிறார்கள். தயாரிப்பு ஆபத்து மிகுந்த சூதாட்டமாக மாறிவிட்டது. நடிகர்களாவது படங்கள் தயாரிக்கிறார்களே என்று திரையுலகம் சமாதானம் சொல்கிறது. அது உண்மை. அதேநேரம் திரைத்துறை சிலரது அதிகாரத்துக்கு உள்பட்ட தனிநபர்களின் உலகமாக மாறி வருவதையும் கவனிக்க வேண்டும்.

நடிகர் விஷாலில் இருந்து தொடங்கலாம். 
 
2004 -இல் செல்லமே படத்தில் விஷால் அறிமுகமானார். படத்தை தயாரித்தவர்கள் வி.ஞானவேலு, ஜெயபிரகாஷ். உண்மையில் செல்லமே படத்துக்கு பைனான்ஸ் செய்தது விஷாலின் குடும்ப நிறுவனமான ஜி.கே.ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன். சொந்த தயாரிப்பில் அறிமுகமானால் சரியாக இருக்காது என்று வி.ஞானவேலும், ஜெயபிரகாஷும் முன்னிறுத்தப்பட்டார்கள் என படம் வெளியான காலகட்டத்தில் பேசப்பட்டது.

அது உண்மை என்பது போல் விஷாலின் இரண்டாவது படமான சண்டக்கோழியை ஜி.கே.ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்தது. தயாரித்தவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா. விஷாலின் தந்தை திரையுலகம் அறிந்த முன்னணி தயாரிப்பாளரான ஜி.கே.ரெட்டி.
 
திமிரு, தோரணை, சத்யம், தீராத விளையாட்டு பிள்ளை, வெடி என விஷாலின் பெரும்பாலான படங்களை அவரது குடும்ப நிறுவனமான ஜி.கே.ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷனே தயாரித்தது. படங்கள் தொடர் நஷ்டத்தை சந்திக்க அண்ணனிடமிருந்து பிரிந்து தனி வழி போக ஆரம்பித்தார் விஷால். 
 
வெடி படத்தின் தோல்விக்குப் பிறகு அவர் நடித்த படம் சமர். அதனையடுத்து பட்டத்து யானை. மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரித்திருந்தாலும் பட்டத்து யானையை மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து விஷாலே விநியோகித்தார். அதற்கு அடுத்தப் படத்திலேயே - பாண்டிய நாடு - விஷால் தயாரிப்பாளரானார். 
 
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு நான் சிகப்பு மனிதன். தயாரிப்பு விஷால், இணை தயாரிப்பு யுடிவி. அதையடுத்து பூஜை. தயாரிப்பு விஷால். தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் ஆம்பள படத்தின் தயாரிப்பு குஷ்பு மற்றும் விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கப் போகும் படத்துக்கும்  விஷாலே தயாரிப்பாளர்.
 
மத கஜ ராஜா படமே விஷால் தயாரிப்பாளரானதற்கு முதற் காரணம். தயாரிப்பாளர்களால் அப்படத்தை வெளியிட முடியவில்லை. விஷால் முயற்சி எடுத்தார். சில லட்சங்கள் அவருக்கு நஷ்டமானது. அந்த நேரம் விஜயகாந்த் விஷாலை அழைத்து அறிவுரை கூறினார். இன்னொருவர் தயாரித்த படத்தை, அதில் நீயே நடித்திருந்தாலும் வெளியிட முயற்சிக்காதே, நஷ்டம்தான் ஏற்படும் என்றார்.

விஜயகாந்தின் அறிவுரையால் மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியை விஷால் கைவிட்டு தானே தயாரிப்பாளராவது என முடிவு செய்தார். தயாரிப்பில் அவரது குடும்பத்துக்குள்ள முன் அனுபவம் அவருக்கு கைகொடுத்தது. 
 
நிர்ப்பந்தத்தினாலோ, திட்டமிட்டோ இல்லை சந்தர்ப்பவசத்தாலோ விஷாலைப் போன்ற ஒரு நடிகர் தனது படங்களின் தயாரிப்பாளராக மாறுகையில் ஏற்படும் விளைவு என்ன?
 
அந்த நடிகரை வைத்து வெளிநபர் ஒருவர் படம் தயாரிப்பதற்கான கதவு நிரந்தரமாக மூடி விடுகிறது. இன்னொரு தயாரிப்பாளர் அந்தக் கதவு வழியாக நுழைவது அசாத்தியம். 
 
விஷால் ஒருவித நிர்ப்பந்தத்தால் தயாரிப்பாளரானார். திட்டமிட்டு தயாரிப்பாளரானால்...? அது அடுத்த பாகத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்