பிடிவாத தொலைக்காட்சிகள் தடுமாறும் திரையுலகினர்

ஜே.பி.ஆர்

புதன், 26 ஆகஸ்ட் 2015 (12:53 IST)
படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை எந்த தொலைக்காட்சி வாங்குகிறதோ அவர்களுக்கு மட்டும் அப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்கள், நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப அனுமதி தருவோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு முடிவை எடுத்தது.

மேலும், படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கும் சேனல்கள், அப்படத்தின் விளம்பரச் செலவு என ஒளிபரப்பு உரிமையின் கணிசமான தொகையை பிடித்துக் கொள்கின்றன. உதாரணமாக ஒரு படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 5 கோடிக்கு வாங்குவற்கு ஒரு சேனல் முன்வந்தால், அப்படத்தை தங்கள் சேனலில் விளம்பரம் செய்வதற்கு என ஐந்து கோடியில் இரண்டு முதல் இரண்டரை கோடிவரை பிடித்துவிட்டு மீதியையே தருகின்றன. இனி 25 லட்சத்திற்கு மேல் விளம்பரச் செலவுக்கு தர மாட்டோம் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்தது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் முக்கியமான நடிகர்களின் படங்கள் தவிர்த்து சின்ன படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில்லை. 100 படங்கள் தமிழில் தயாரானால் 10 படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மட்டுமே வாங்கப்படுகிறது. இதன் காரணமாக, தொலைக்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் படங்களை வாங்க தயாரிப்பாளர்கள் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவுதான் இது.

ஆனால், தொலைக்காட்சிகள் அசருவதாக இல்லை. இன்னும் ஒரு வருடத்துக்கு எந்தப் படங்களின் ஒளிபரப்பு உரிமையையும் வாங்கப் போவதில்லை என முடிவெடுத்து அதில் உறுதியாக நிற்கின்றன. தனுஷ் தனது மாரி படத்தின் சம்பளமாக படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிக் கொண்டார். எப்படியும் தொலைக்காட்சிக்கு பத்து கோடிக்கு விற்றுவிடலாம் என்பது அவரது கணக்கு. ஆனால், இன்றுவரை மாரியை வாங்க யாரும் தயாராகயில்லை. முன்னணி நடிகரின் படத்துக்கே இந்தநிலை.

முன்பு கார்த்தி நடித்த சுமார் படங்களின் தொலைக்காட்சி உரிமை 11 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இன்று பாகுபலிக்கே அந்த தொகையை தர யோசிக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சி மட்டும் இந்த ஓராண்டு தடையில் கலந்து கொள்ளவில்லை. தங்களுக்கு விருப்பமான படங்களின் தொலைக்காட்சி உரிமையை மட்டும் வாங்குவது என்ற முடிவில் உள்ளனர். அப்படி கமலின் பாபநாசம், விஜய்யின் புலி படங்களின் உரிமையை வாங்கியுள்ளனர். பாகுபலியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

படங்களை வாங்குவதில்லை என்ற முடிவில் மற்ற சேனல்கள் உறுதியாக இருப்பதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையால் வரும் வருமானம் இன்றி தயாரிப்பாளர்கள் திணறும்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்