தீபாவளி நெருக்கடியில் திணறும் படங்கள்

ஜே.பி.ஆர்

செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (11:01 IST)
தீபாவளி அன்று பட்டாசு, இனிப்புகளுடன் முக்கிய இடம்பிடிப்பது, புதிய திரைப்படங்கள். தீபாவளியை மனதில் வைத்தே முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்படும்.

பட்ஜெட் 15 கோடிக்கு மேல் உள்ள திரைப்படங்களை தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பத்து முக்கிய தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதியால், தீபாவளியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
 
இந்த தீபாவளிக்கு இப்போதே பல படங்கள் ஆயத்தாமாகிவிட்டன. 
 
தூங்கா வனம்
 
2015 -இல் உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து கமலின் தூங்கா வனமும் வெளியாகிறது. ப்ரெஞ்ச் திரைப்படம், ஸ்லீப்லெஸ் நைட்டின் அதிகாரப்பூர்வ தழுவலான இந்தப் படத்தை 38 தினங்களில் முடித்தார் கமல். போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.


 

 
தீபாவளிக்கு படத்தை வெளியிட்டால் விளம்பரம் அதிகமின்றியை நல்ல ஓபனிங்கை பெற முடியும் என்பதால் கமல், தீபாவளியை குறிவைத்துள்ளார்.
 
தூங்கா வனத்தில் கமல், பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், த்ரிஷா, ஆஷா சரத், மதுஷாலினி, யூகிசேது உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை. கமலின் முன்னாள் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வம் படத்தை இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பு.
 
அஜித் படம்
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் முடியும் நிலையில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் அஜித்துடன் ஸ்ருதி, லட்சுமி மேனன், கபீர் சிங், ராகுல்தேவ் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு சூரி. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அதன் இறுதிகட்டத்தில் உள்ளது.
 
விரைவாக படத்தை முடித்து தீபாவளிக்கு படத்தை கொண்டுவர விரும்புகிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவரது முந்தைய தயாரிப்பான என்னை அறிந்தால் 78 கோடிகளை வசூலித்திருந்தாலும் அவருக்கு பெரிய லாபமில்லை. அதில் விட்டதை இதில் பிடிக்க தீபாவளி ஓபனிங் மிக அவசியம்.
 
தனுஷ் படம்
 
வேலையில்லா பட்டதாரி டீம் (நாயகி அமலா பால் மட்டும் கிடையாது) மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படமும் தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு.
 
மாரி சரியாகப் போகாத நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அதிகம் நம்பியுள்ளார் தனுஷ். படம் விரைவில் தயாராகிவிடும் என்பதால் இவர்களின் இலக்கும் தீபாவளியாகவே உள்ளது.
 
இது நம்ம ஆளு
 
இடியாப்ப சிக்கலில் இருக்கும், இது நம்ம ஆளு படமும் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்புள்ளது. இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. கதைக்கு தேவையில்லாத ஒரு குத்துப் பாடலை..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க,

மட்டும் எடுக்க வேண்டும் என்று சிம்பு தரப்பு வலியுறுத்துகிறது. இந்தப் பாடல் முடிந்தால் படம் தயாராகிவிடும்.
 
இது நம்ம ஆளு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளதால் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரலாம். ஆனால், சிம்பு படமல்லவா. தாமதத்துக்கு குறைவிருக்காது, தீபாவளிக்கே படம் வரும் என்கிறார்கள்.
 
தாரை தப்பட்டை


 

 
பாலா படம் குறித்து கடைசி நிமிடம்வரை எதுவும் கூறுவதற்கில்லை. அதேநேரம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் தாரை தப்பட்டையை தீபாவளிக்கு வெளியிட முயற்சிக்கலாம் என்ற பேச்சு உள்ளது. பாலாவின் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ளனர். இசை இளையராஜா. இது அவரது ஆயிரமாவது படம். ஒளிப்பதிவு செழியன்.
 
தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர். 
 
இவை தவிர மேலும் பல படங்கள் தீபாவளி நப்பாசையுடன் ரேஸில் உள்ளன. ஆனால், இதில் எத்தனைப் படங்களை தீபாவளி தாங்கும்?
 
தமிழகத்தில் புதிய திரைப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை சுமாராக 800 இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு 300 முதல் 400 திரையரங்குகளை ஒதுக்க வேண்டிவரும். இரண்டு படங்கள் வெளியானாலே ஹவுஸ்ஃபுல்லாகிவிடும் நிலையில், மூன்று படங்களுக்கு மேல் சாத்தியமேயில்லை.
 
தீபாவளியை கைப்பற்றும் அதிர்ஷ்டம் எந்தப் படங்களுக்கு இருக்கிறதோ.

வெப்துனியாவைப் படிக்கவும்