சினி பாப்கார்ன் - தாப்ஸியின் கொலவெறி

ஜே.பி.ஆர்

வெள்ளி, 6 மார்ச் 2015 (08:51 IST)
தாப்ஸியின் கொலவெறி
 
டெல்லி மாணவி நிர்பயாவை கற்பழித்து கொன்ற குற்றவாளியின் பேட்டியை முன்வைத்து, இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற குற்றவாளியின் பேட்டி, நிர்பயாவை குற்றப்படுத்தும் விதத்தில் இருந்தது. அதனால், அப்படத்தை வெளியிடக் கூடாது என மத்திய அரசு தடை விதித்தது.
இந்தத் தடைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக திரையுலகினர்.
 
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிடும் என மத்திய அரசு நினைக்கிறது என அனுராக் பாசு கூறியுள்ளார்.
 
பேட்டியை ஒளிபரப்ப உடனடியாக தடை விதித்த மத்திய அரசு, கடந்த 3 வருடங்களாக அந்த குற்றவாளியை ஏன் தூக்கில் போடாமல் வைத்திருக்கிறது என புனித் மல்கோத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பேட்டி அளித்த மிருகத்தை தண்டிப்பதைவிட்டு, பேட்டிக்கு மத்திய அரசு தடை விதிப்பது கேலி கூத்து என சாடியுள்ளார் நடிகை சோனல் சௌகான்.
 
இவர்களைவிட தாப்ஸிதான் டாப். கடவுளே, எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மிருகத்தை என்னுடைய கையினால் கொலை செய்வேன் என கூறியுள்ளார்.
 
தாப்ஸியை கொலைகாரர் ஆக்குமுன் மத்திய அரசு உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.

விடுகதையா இந்த வாழ்க்கை...?
 
உச்சத்தின் படம் குறித்தும், உச்ச நடிகர் குறித்தும் எதுவும் பேசவோ எழுதவோ கூடாது என நீதிமன்றம் பேச்சுரிமைக்கு தடைவிதித்ததால் நஷ்டஈடு கேட்டவர்கள் அமைதியாக இருப்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அடுத்தகட்ட போராட்டம் வெடிக்கலாம்.
உச்சத்துக்கு நிலைமை தெரியும் என்பதால் முதலில் சமாதானம் பேச நியமித்தவரை மாற்றிவிட்டு சங்கம் வளர்த்த நகரை மையமாகக் கொண்ட அன்பானவரை புதிதாக நியமித்திருக்கிறாராம். அன்பானவரின் அறிவுரைப்படிதான் இப்போது காய் நகர்த்தப்படுகிறது.
 
கட்டப்பஞ்சாயத்துக்கு பெயர்போன அன்பானவருடனான உச்சத்தின் நட்பைப் பார்த்து சுற்றமும் நட்புமே நகம் கடிப்பதாக தகவல்.

இதுதாம்பா சோதனைங்கிறது
 
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நியாயமாக படத்துக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். மாநில அரசின் எதிர்தரப்பில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு யு சான்றிதழ் கிடைத்தாலும் வரிச்சலுகை தருவதில்லை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் வரிச்சலுகைக்காக நீதிமன்றம்வரை செல்லவேண்டி வந்தது.
அப்படியானால் விஜயகாந்தின் மகன் படத்துக்கு மட்டும் தந்துவிடுவார்களா என்ன?
 
வரிச்சலுகைக்கு விண்ணப்பித்தால் கண்டிப்பாக தரமாட்டார்கள். அப்படியானால் அதனை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். வரிச்சலுகை அரசியல் குறித்து இதுவரை வாய் திறக்காதவர் சொந்தப்படம் என்றதும் அரசியல் பேசுகிறார் என்று விஜயகாந்தையே எதிர்தரப்பு அட்டாக் செய்யலாம். அதேநேரம் மகனின் அறிமுகப் படத்துக்கும் சிக்கல் ஏற்படலாம்.
 
இந்த குழப்பங்களுக்கு வரிச்சலுகை இல்லாமலே படத்தை வெளியிடலாம் என விஜயகாந்த் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
கேப்டனுக்கே gate யா?

வெப்துனியாவைப் படிக்கவும்