சினி பாக்கார்ன் - அமிதாப் - கௌதம் - சிம்பு

ஜே.பி.ஆர்

சனி, 14 மார்ச் 2015 (11:54 IST)
அமிதாப்
 
அமிதாப் தனது பிளாக்கில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம் கவனத்துக்குரியது. அவரது குடும்பத்துக்கு மட்டும் 6 பத்ம விருதுகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.
அமிதாப்பின் தந்தைக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் முன்பு வழங்கப்பட்டது. அமிதாப்பச்சனுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் என இரு பத்ம விருதுகள். மூன்றாவதாக பத்ம விபூஷன் விருது வரும் ஏப்ரல் மாதம் அவருக்கு வழங்கப்படுகிறது.
 
அமிதாப்பசின் மனைவி ஜெயா பச்சனுக்கும், மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
மத்திய மாநில அரசுகளின் விருதுகள் பிரபலத்தை அளவுகோலாகக் கொண்டே வழங்கப்படுகின்றன. ஜெயா பச்சனைவிடவும் இந்த தேசத்துக்கு பங்காற்றிய ஆயிரக்கணக்கானவர்கள் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் ஜெயா பச்சனுக்கு பத்ம ஸ்ரீ விருதும், அமிதாப்பச்சனுக்கு 3 பத்ம விருதுகளும் வழங்கப்பட்டிருப்பது, பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன என்பதற்கு உறுதியான சான்று. 
 
கலை, சேவை என அனைத்தையும் சினிமாவை கொண்டு அளக்கும் இந்தப் போக்கு எப்போது மாறப் போகிறதோ.

கௌதம்
 
கௌதம் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், எப்போதும் 75 சதவீத கதையைதான் நடிகர்களிடம் கூறுவேன். படப்பிடிப்பின் போதுதான் மீதி கதையை உருவாக்குவேன். கதைக்கு ஹீரோ செட்டாகிறாரா என்று பார்த்துதான் மீதி கதையை யோசித்து முடிவெடுப்பேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை இதேபாணியில்தான் எடுத்தேன். ஆனால், என்னமோ துருவநட்சத்திரத்தின் போது சூர்யா இதனை விரும்பவில்லை என கூறியிருந்தார். 
கமலை வைத்து இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தின் முழுக்கதையும் தயாரான பிறகே படப்பிடிப்பு தொடங்கியதை அவர் பேட்டியில் கூறவில்லை. கௌதமின் இந்த 75 சதவீத கதை காரணமாகதான் அவரது நீதானே என் பொன்வசந்தம், நடுநிசி நாய்கள் போன்றவை படுதோல்வியடைந்து அவரை நடுத்தெருவில் நிறுத்தியது. அஜீத்தை இயக்கக் கிடைத்த வாய்ப்பையும் தனது 75 சதவீத கதை காரணமாக கௌதம் வீணடித்தார் என்றே சொல்ல வேண்டும்.
 
என்னை அறிந்தால் படம் தோல்வியடையாததற்கு ஒரே காரணம் அஜீத்தின் ஸ்டார் பவர். நஷ்டத்தை ஏற்படுத்தவில்லையே தவிர என்னை அறிந்தால் படத்தை பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. சென்னை சிட்டியில் வேலையில்லா பட்டதாரியின் வசூலைக்கூட என்னை அறிந்தால் எட்டவில்லை. முதல் ஐந்து தினங்கள் அஜீத்தின் மீதான கிரேஸ் வசூலித்து தந்த கலெக்ஷன்தான் படத்தை காப்பாற்றியது. 
 
என்னை அறிந்தால் படப்பிடிப்புக்கும் கௌதம் 75 சதவீத கதையுடன் சென்று கிளைமாக்ஸில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி ஸ்ரீதர் ராகவன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோரின் உதவவியை நாட வேண்டி வந்தது. படத்தின் கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் மட்டும் இல்லையென்றால் என்னை அறிந்தால் இந்த வசூலைகூட பெற்றிருக்காது. 
 
என்னை அறிந்தால் படத்தின் முதல் பாதிக்கு அளவுக்கு அதிகமான நாள்களை எடுத்துக் கொண்டு இரண்டாம் பாதியை குறுகிய காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஒழுங்கான ஸ்கிரிப்ட் கையில் இல்லாததால் ஏற்பட்ட குளறுபடிகள். அதனை உணராமல் இப்போதும் 75 சதவீத கதை என்று அவர் டமாரமடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இன்னும் எத்தனை தயாரிப்பாளர்களை இவர் தெருவில் நிறுத்தப் போகிறாரோ என்ற கவலைதான் ஏற்படுகிறது.

சிம்பு
 
எந்திரன் பாடலில் வரும் இரும்பிலே ஒரு இதயம் இருந்தால் மட்டுமே சிம்புவை வைத்து படம் தயாரிக்க முடியும். போடா போடி படத்தை தயாரித்தவர்களை ரத்தக் கண்ணீர் வடிக்கவிட்டவர் சிம்பு. ஒரு படத்தை தொடங்க வேண்டியது. பிறகு படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காத்திருக்க நாள் கணக்கில் வாரக் கணக்கில் மாதக் கணக்கில் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பது.

அத்துடன் தொடங்கிய படம் முடியும் முன்பே இரண்டு மூன்று புதுப்படங்களை தொடங்கி அதையும் நட்டாற்றில் தவிக்கவிடுவது. சிம்புவின் திருவிளையாடல்களால் 30 லட்ச ரூபாய் செட் போட்டு தொடங்கிய வேட்டை மன்னன் அப்படியே ட்ராப் செய்யப்பட்டது.
 
பத்தே நாளில் படம் என்று விளம்பரப்படுத்திய வாலு மூன்று வருடங்கள் கழித்தும் இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டிருக்கிறது. ஃபெப்ரவரி 3 வெளியாகும் என்று சொல்லப்பட்டு, பிறகு மார்ச் 27 -க்கு தள்ளி வைக்கப்பட்ட வாலு சென்சார் முடிந்து யு சான்று வாங்கிய பிறகும், மகாஜனங்களே அப்படம் இப்போதைக்கு வெளிவருவதாக இல்லை. மே மாதம் பார்த்தால் போதும் என்கிறார்கள். 
 
அப்படியானால் இது நம்ம ஆளு படம் மட்டும் உடனே எப்படி முடிந்தது?
 
அந்த கிரெடிட்டை நீங்கள் தரவேண்டியது நயன்தாராவுக்கு. சிம்புவை படப்பிடிப்புக்கு வரவைக்க ஒவ்வொரு படத்திலுமா நாங்க நயன்தாராவை அவருக்கு ஜோடியாக்க முடியும் என்று கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 
 
நியாயம்தானே.

வெப்துனியாவைப் படிக்கவும்