கே.வி.விஜயேந்திர பிரசாத் - பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் வெற்றியின் காரணகர்த்தா

ஜே.பி.ஆர்

புதன், 22 ஜூலை 2015 (08:42 IST)
கே.வி.விஜயேந்திர பிரசாத் என்ற பெயர் ஆந்திராவில் பிரபலம். சினிமா கதாசிரியர். பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்றால்  சட்டென்று தெரியும்.
 
இன்று இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் இரண்டு படங்களின் கதாசிரியர் இவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
விஜயேந்திர பிரசாத் இயக்குனராகும் ஆசையில் தெலுங்குப் படவுலகில் நுழைந்தவர். 1996 -இல் அர்த்தங்கி என்ற படத்தை இயக்கினார். படம் தோல்வியடையவே அதன் பிறகு படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமலே போனது. 1988 -இல் ஜானகி ராமுடு படத்தின் கதையை எழுதி கதாசிரியரானார். அதன் பிறகு 18 படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள்.
 
அப்பாவின் தோல்வியிலிருந்து எழுந்து வந்தவர் ராஜமௌலி. வெற்றி மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது. அப்பாவின் கதை ஞானத்தை பலமாகக் கொண்டு இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார். ராஜமௌலியின் சிம்மாத்ரி, யமதொங்கா, விக்ரமார்க்குடு, மகாதீரா, பாகுபலி எல்லாம் விஜயேந்திராவின் கதையில் உருவானவைதான்.
 
கதாசிரியராக பெயர் வாங்கிய பின் தனது கனவான இயக்கத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரும்பினார். 2006 -இல் ஸ்ரீ கிருஷ்ணா படத்தை இயக்கினார். 2011 ராஜன்னா. இந்தப் படம் ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது.
 
பஜ்ரங்கி பைஜான் கதை விஜயேந்திர பிரசாத்தினுடையது. பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கதையை அவர் இயக்குனர் கபீர் கானிடம் கூறியுள்ளார். அதேநேரம், இந்தக் கதை ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸின், ஆலிஸ் இன் தி சிட்டீஸ் (1974) படத்தின் தழுவல் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பஜ்ரங்கி பைஜான் போலவே வழி தவறிய சிறுமியை அவளது வீட்டில் சேர்ப்பதுதான் விம் வெண்டர்ஸின் படத்தின் கதையும். சிறுமியிடம் தனது பாட்டி வீட்டின் முகப்பு புகைப்படம் மட்டுமே இருக்கும். அதனை வைத்து சிறுமியும், அவளுக்கு உதவும் எழுத்தாளரும் ஊர் ஊராக அலைவதுதான் கதை. விம் வெண்டர்ஸின் படத்தை இந்திக்கு ஏற்படி மாற்றியிருக்கிறார்கள் என சிலர் கூறுகின்றனர். 
 
ராஜமௌலியின் மரியாத ராமண்ணாவுக்கும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது. மரியாத ராமண்ணாவுக்கு கதாசிரியர், ராஜமௌலியின் ஒன்றுவிட்ட சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி. இவர்தான் நான் ஈ படத்துக்கும் கதாசிரியர். பஸ்டர் கீடனின், அவர் ஹாஸ்பிடாலிட்டி படத்தை தழுவி எழுதப்பட்டது மரியாத ராமண்ணா.
 
இந்த சர்ச்சைகளைத் தாண்டி ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது. அது, கதை. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த கதையும், திரைக்கதையும் இருந்தால் வெற்றி பெற முடியும். தெலுங்கு, இந்தி, மலையாளப் படங்களில் எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது. பெரிய இயக்குனர்களும் கதாசிரியர்களிடம் கதைக்கான பொறுப்பை ஒப்படைக்கின்றனர். ராஜமௌலியின் வெற்றியும், பஜ்ரங்கி பைஜானின் வசூலும் அதைத்தான் சொல்கின்றன.
 
கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சேர்த்து போட்டுக் கொண்டால்தான் இயக்குனருக்கு பெருமை என்ற அபத்தம் தமிழ் சினிமாவின் மூளையில் எப்படியோ பதிந்துவிட்டது. நேர்மையான முறையில் கதையை வாங்கி பயன்படுத்தாமல் கதைத்திருட்டு அதிகமாக நடப்பதும் இங்கேதான். ராஜமௌலியைப் பார்த்தாவது நம்மவர்கள் திருந்தினால் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்