திருட்டு வி.சி.டி. ஒழிப்பு, திரையுலகினர் கையில்

ஜே.பி.ஆர்

புதன், 26 நவம்பர் 2014 (11:15 IST)
தும்பை விட்டு வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது திரையுலகம். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிப்பது, புதுச்சேரி முதல்வரை சந்தித்து பிராது தருவது என பயன்தராத வழிகளில் திரையுலகினர் சஞ்சரிக்கின்றனர். நோய்நாடி நோய்முதல்நாடி என்றார் வள்ளுவர். திரையுலகினர் அவசரமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்தக் குறளைதான்.
 
திருட்டு வி.சி.டி. நோய்க்கான மூலகாரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். 
 
இந்தியாவில் இந்த வருடம் அதிக திரைப்படங்களை தயாரித்து முதலிடத்தில் உள்ளது தமிழ் திரையுலகம். ஆனால் ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் பாதியளவே தமிழகத்தில் உள்ளது. திரையரங்குகள் வர்த்தக அங்காடிகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியதற்கு பிரதான காரணம் பராமரிப்பின்மையும், அதிக கட்டண வசூலும்தான். 
 
புதிய படங்கள் வெளியிடுகையில் 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட திரையரங்குகளில் 150 முதல் 200 ரூபாய்வரை வசூலிக்கிறார்கள். ஹீரோவின் சந்தை மதிப்பைப் பொறுத்து இது 3,00 400 என்றுகூட உயரும். இப்படி அதிகம் வசூலித்து பழகியவர்கள் சுமாரான படங்களுக்கும் 100 ரூபாய் வசூலிக்கின்றனர். இந்த கட்டண கொள்ளை பொதுமக்களை திரையரங்குகளிலிருந்து அகற்றி நிறுத்தியது. என்னதான் பணம் இருந்தாலும் தெரிந்து கொண்டே கொள்ளைக்கு உடன்பட ஜனங்கள் தயாராக இல்லை. இதனை உறுதியாக சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
 
சுகாதாரமாகவும், நவீன தொழில்நுட்பத்துடனும் இயங்கும் மல்டிப்ளக்ஸ்களில் 120 ரூபாய் கட்டணம் என்ற போதிலும் அங்கு கூட்டம் அம்முகிறது. வீட்டியே அதிநவீன வசதியுடன் படம் பார்க்கும் வசதியுள்ள அப்பர் கிளாஸும், அப்பர் மிடில் கிளாஸும்தான் அதன் வாடிக்கையாளர்கள். சென்னையின் மையமான வடபழனியில் இயங்கும் மல்டிப்ளக்ஸ் அல்லாத ஏவிஎம் ராஜேஸ்வரியில் எந்தப் படத்தை திரையிட்டாலும் ஹவுஸ்ஃபுல்தான். டிக்கெட் கட்டணமான 40 ரூபாய்க்கு மேல் அங்கு வசூலிக்கப்படுவதில்லை. அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ் என்று எந்தப் பிரிவினரும் திரையரங்குகளில் படம் பார்க்க தயாராகவே உள்ளனர். அவர்களை அண்ட விடாமல் செய்வது டிக்கெட் கட்டணத்துக்கு மேல் திரையரங்குகள் அடிக்கும் கொள்ளை.
 
அரசு நிர்ணயித்த கட்டணம் போதவில்லை எனில் அதனை அதிகப்படுத்தித்தர அரசை கேட்கலாம். டிக்கெட்டில் 100 ரூபாய் என்று போட்டிருந்தால் அதனை தருவதற்கு தயாராக இருப்பவர்களும், 40 ரூபாய் டிக்கெட்டை அறுபது ரூபாய்க்கு விற்றால் வாங்க தயங்கவே செய்வார்கள். இது பணம் குறித்த தயக்கம் இல்லை. தெரிந்தே ஏமாறுவதா என்ற மனம் குறித்த தயக்கம். 
 
திரையுலகம் முதலில் கவனிக்க வேண்டிய பிரச்சனை இதுதான். கட்டண கொள்ளையால் கசப்புற்றவர்கள்தான் திருட்டு வி.சி.டி.யை தேடிப் போகிறார்கள். அதனை சரி செய்யாமல் போலீஸnரை முடுக்கிவிட்டு சிடி கடைகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தினால் திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்தலாம் என திரையுலகினர் நினைக்கின்றனர். 
 
அதிகாரத்தில் உள்ளவர்களின் மைத்துனனும், மகனும், பேரனும் படம் தயாரிக்கையில் அந்தப் படங்களின் திருட்டு வி.சி.டி.கள் வந்துவிடாமல் இருக்க போலீஸ்துறையின் வால் திருகிவிடப்படும். சில தினங்களுக்கு ரெய்டுகள், கைதுகள் என்று அல்லோலப்படும். ஆனால் எல்லாம் தற்காலிகம். மகன்களும், பேரன்களும் வருடத்துக்கு ஒன்றே இரண்டோ படங்கள் தயாரிக்கிறார்கள், நடிக்கிறார்கள். தமிழில் வெளிவருவது சராசரியாக 150 படங்களுக்கும் மேல். எல்லாற்றிற்கும் காவல்துறை வாலை தூக்கி ஓடிக் கொண்டிருக்காது. 

மேலும், பிரச்சனைகளை ஒருபோதும் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது தவறான திசைக்கே கொண்டு செல்லும். காவல்துறை திருட்டு வி.சி.டி. விஷயத்தில் விழிப்புடன் செயல்படவில்லை என குமுறும் திரையுலகினர் இதே காவல்துறையும், அதிகார வர்க்கமும்தான் திரையரங்குகளின் கட்டண கொள்ளையையும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை ஏன் இவர்களால் தட்டிக் கேட்க முடியவதில்லை?
ஓபனிங் எனப்படும் முதல் மூன்று நாள் கலெக்ஷனில்தான் இங்குள்ள நடிகர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதன் வழியாகதான் அவர்களுக்கு - அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் சந்தை மதிப்பிக்கும் தொடர்பில்லாத அதிகபடி சம்பளம் தரப்படுகிறது. அது அவர்களுக்கு தெரியும். அதனால்தான் அரசு திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் கட்டண கொள்ளையில் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். அங்கே வளைந்து கொடுக்கும் அதிகார வர்க்கம் இங்கே மட்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எப்படி?
 
கேரளாவில் காவல்துறையினர் திருட்டு வி.சி.டி.யை பெருமளவு கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்கின்றனர். சரிதான். அங்கே கட்டண கொள்ளையும் பெருமளவு கிடையாதே. எந்த நடிகரின் படத்தையும் டிக்கெட்டில் உள்ள கட்டணத்திலேயே நீங்கள் பார்க்கலாம். திருவனந்தபுரத்தில் அரசு நடத்தும் கைரளி திரையரங்கில் ஒரு பாட்டில் தண்ணீர் வெளியே விற்கப்படும் அதே 20 ரூபாய்க்கு கிடைக்கும். இங்கு அப்படியா? 
 
ஒரு இடத்தை மட்டும் சீரமைக்க நினைப்பது மாற்றமில்லை, வீக்கம். திரையுலகம் மாற்றத்தையல்ல இந்த வீக்கத்துக்காகதான் நேரத்தை வீணடிக்கிறது. பொதுமக்களுக்கு திருட்டு வி.சி.டி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்களாம். திருட்டு வி.சி.டி. குறித்த விழிப்புணர்வு என்பது அதை மட்டுமே சார்ந்ததில்லை. கட்டணமே போடாத டிக்கெட்டை வாங்கி படம் பார்க்கக் கூடாது, எம்ஆர்பிக்கு மேல் ஒரு பொருளுக்கு பணம் தரக்கூடாது, நடிகன் என்பவன் நடிகன் மட்டுமே பாலாபிஷேகம் செய்ய அவன் கடவுளோ அரசியலுக்கு வா என்று அழைக்க அவன் தலைவனோ கிடையாது என்பதான விழிப்புணர்வுகளுடன் தொடர்புடையது. 
 
இந்த எளிய உண்மைகளை அறியாமல் இல்லை அறிந்தும் தெரிந்த பாவம் காட்டாமல் திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போர் தொடுக்கிறோம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று முட்டுச்சந்தில் பேரணி நடத்துகிறார்கள். இவர்கள் போர் தொடுக்க வேண்டியது தங்களுக்கு எதிராகதான். விழிப்புணர்வு அடைய வேண்டியதும் இவர்கள்தான். உள்ளே இருக்கும் எதிரியை கமிஷனர் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் இவர்களை என்னவென்பது.
 
வேடிக்கை மனிதர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்