விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் - ஒரு சுவாரஸிமான பிளாஷ்பேக்

ஜே.பி.ஆர்

வியாழன், 4 டிசம்பர் 2014 (09:02 IST)
1992 -இல் விஜய் நடிக்க வந்த போது ஒரு புதுமுகத்துக்குரிய எதிர்பார்ப்பு மட்டுமே அவர் பேரில் இருந்தது. அதாவது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. படத்தில் நடிப்பதற்கு முன் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா ஆகியோருடன் அவர் அளித்த பேட்டியொன்று பிரபல வார இதழில் வெளியானது. அதில் தன்னுடைய இலக்கு கமர்ஷியல் சினிமா என்பதையும், முன்னோடி ரஜினி என்பதனையும் அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
 
1992 -இல் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு வெளியானது. வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியை கொண்டதாக இருந்தது கதை. சுமாரான வரவேற்பையே படம் பெற்றது. ஆனாலும் ஒரு புதுமுகமாக விஜய்க்கு அப்படம் நியாயம் செய்தது. விஜய்யின் நடிப்பைவிட அவரது தோற்றத்தையே பத்திகைகள் அதிகம் கிண்டல் செய்தன. 
 
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை முதல் படத்தின் ரிசல்ட் அதிகமாக யோசிக்க வைத்தது. அறிமுகமான தனது மகனை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபலம் தேவை என்பதை உணர்ந்தவர், தனது சட்டம் தொடர்பான படங்களால் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற விஜயகாந்தை பயன்படுத்தி கொண்டார். அடுத்தப் படத்தில் விஜயகாந்த் விஜய்யின் அண்ணனாக நடித்தார். படம் செந்தூரப்பாண்டி. எஸ்.ஏ.சி.யின் கணக்கு பொய்க்கவில்லை. படம் 100 நாட்கள் ஓடியது.
 
1994 -இல் வெளிவந்தது ரசிகன். தனி ஹீரோவாக விஜய்க்கு ஓரளவு பெயர் வாங்கித் தந்த படம் இதுதான். ஆனால் அதன் முக்கிய பங்கு சங்கவிக்கே சேரும். அவரது கவர்ச்சிதான் படத்தை கரை சேர்த்தது. 
 
இந்தப் படம் என்றில்லை, விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய்யைவிட அவருடன் ஜோடி சேரும் நடிகைகளின் கவர்ச்சியையே எஸ்.ஏ.சி. அதிகம் நம்பினார். அனால்தான் அவரால் தொடர்ச்சியாக படங்கள் எடுக்க முடிந்ததுடன் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்கவும் முடிந்தது. 
 
1997 விஜய்க்கு முதல் திருப்புமுனை வருடம். இந்த வருடத்தில்தான் விஜய்யின் ஆல்டைம் ஹிட்டான லவ் டுடே வெளியானது. அதைவிட முக்கியமாக விஜய்க்கே ஒரு மரியாதை ஏற்படுத்தி தந்த காதலுக்கு மரியாதை வெளியானது. விஜய்யின் கரியரில் முதல் திருப்புமுனை படம், காதலுக்கு மரியாதை. இது மலையாளத்தில் வெளியான அனியத்தி புறாவு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு இன்னும் ரீமேக் படங்கள் மீதிருக்கும் நம்பிக்கைக்கு பிள்ளையார்சுழி போட்ட படமும் இதுதான்.
 
காதலுக்கு மரியாதைக்குப் பிறகு விஜய்யின் கரியர் கீழ்நோக்கி இறங்கவே இல்லை. ஒவ்வொரு வருடமும் ஒரு சூப்பர்ஹிட் படமாவது வெளியானது. 1998 -இல் நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் என இரு ஹிட் படங்கள். அதற்கு அடுத்த வருடம் குஷி, ப்ரியமானவளே. இதில் ப்ரியமானவளே இந்தி ரீமேக். 2001 -இல் ப்ரெண்ட்ஸ். பத்ரி. இரண்டுமே மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களின் ரீமேக். 
 
விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய வருடம் என்று 2002 -ஐ சொல்லலாம். இந்த வருடத்தில்தான் தமிழன், பகவதி படங்கள் வெளியானது. பகவதி கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அடுத்த வருடம் வெளியான திருமலை விஜய்யை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்மொழிந்தது. 
 
2004 -இல் வெளியான இன்னொரு தெலுங்கு ரீமேக்கான கில்லி விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது. அதன் பிறகு அந்த முகவரியிலிருந்து மாறுவதற்கு விஜய்யே விரும்பவில்லை. இடையில் பல தோல்விகளுக்குப் பிறகும் இன்றும் ஆக்ஷன் ஹீரோவாகவே விஜய் தொடர்கிறார். அதையே அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள். 
 
2007 -இல் வெளியான போக்கிரிக்குப் பிறகு நிஜமான இன்னொரு ஹிட் என்றால் 2012 -இல் வெளியான துப்பாக்கி. நடுவில் வெளியான அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இவையனைத்தும் விஜய்யின் மாஸ் இமேஜை உயர்த்திப்பிடித்த -  பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களுக்கு எதிர்திசையில் பயணிக்கும் - படங்கள். 
 
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற மென்மையான கதையம்சம் கொண்ட படங்களால் ஹீரோவான விஜய் மீண்டும் அதுபோன்ற படங்களில் இனி நடிப்பதற்கான சாத்தியம் இல்லை. இது நல்லதா இல்லை கெட்டதா என்பதை அவரும் அவரது ரசிகர்களும் தான் தீர்மானிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்