சூர்யா - ஒரு நாயகன் உருவான கதை

புதன், 23 ஜூலை 2014 (11:20 IST)
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் இன்று சூர்யாவும் ஒருவர். ஐம்பது கோடிக்கு மேல் சாதாரணமாக வசூலிக்கும் மாஸ் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம் பிடித்து நெடுநாள்களாகிறது. தமிழகத்தை தாண்டி கேரளாவிலும், ஆந்திராவிலும் குறிப்பிடத்தகுந்த ரசிகர்கள் வட்டம் அவருக்கு இருக்கிறது.
இந்த இடத்தை அவர் அடைந்ததற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. சிவகுமாரின் மகன் என்பது அவருக்கு சினிமாவில் அறிமுகமாக உதவியிருக்கலாம். ஆனால் திரையுலகில் காலூன்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு அடையாளத்தை தந்ததில் இயக்குனர்களின் பங்களிப்புக்கு இணையாக சூர்யாவின் உழைப்பும் இருக்கிறது.
லயோலா கல்லூரியில் பிகாம் முடித்த பிறகு சென்னை அம்பத்தூரில் உள்ள கார்மெண்ட் ஃபேக்டரியில் வேலைக்கு சென்று வந்தார் சரவணன். சூர்யாவின் இயற்பெயர் அதுதான், சரவணன் சிவகுமார். அப்போது நடிப்பு குறித்து அவரது சிந்தையில் எதுவும் இல்லை. நடிகனாகும் விருப்பமும் இல்லை. 
 

இயக்குனர் வஸந்துக்கு அந்த ஆசை இருந்தது. 1995 -ல் வெளியான அவரது ஆசை திரைப்படத்தில் நடிக்க அவர் அணுகியது சூர்யாவை. ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று வலுக்கட்டாயமாக அந்த வாய்ப்பை உதறினார்.

வஸந்த் சோர்ந்து விடவில்லை. மீண்டும் தனது நேருக்கு நேர் படத்துக்காக சூர்யாவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். சரவணன் என்ற பெயர் சூர்யாவாக மாறியது. ஒரு நாயகன் உதயமானது அப்போதுதான்.
 
ஆனால் நடிப்பு அவ்வளவு சுலபமாக இல்லை. முக்கியமாக நடனம். இந்த சினிமாவே வேண்டாம் என்று பலமுறை ஓடியிருக்கிறார். அப்போது ரகுவரன் சொன்ன வார்த்தைகள்தான் அவருக்குள் தூண்டுதலை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் எந்த ஈடுபாடில்லாமல் இருந்தவரிடம், உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்காம எப்படி உனக்கெல்லாம் சாப்பிட தூங்க முடியுது? என்று ரகுவரன் கேட்டது சூர்யாவுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. 1999 -ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யாவின் முகத்தை ரசிகர்களிடம் பதிய வைத்தது. ப்ரெண்ட்ஸ் திரைப்படம் அதனை இன்னும் மேம்படுத்தியது. ஆனால் பத்தோடு பதினொன்றாகதான் இருந்தார் சூர்யா. 

அவருக்கென தனித்த அடையாளத்தை தந்த முதல் படம் பாலாவின் நந்தா.
சூர்யா அவருக்குள் இருந்த நடிகனை நந்தாவில் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அடுத்தடுத்தப் படங்கள் அவரை பட்டை தீட்டுவதாக இல்லை. உன்னை நினைத்து வெற்றி பெற்றாலும் சூர்யாவின் தனித்துவத்தை அது வெளிப்படுத்தவில்லை. ஸ்ரீ படத்தில் சூர்யாவின் தோற்றம் கவர்ந்த அளவுக்கு கதை கவரவில்லை.
அதையடுத்து வந்தது அமீரின் மௌனம் பேசியதே. நந்தாவில் அவர் அடையாளம் கண்டு கொண்ட திசையை மௌனம் பேசியதே இன்னும் துலக்கமாக்கியது. 

அவரை மாஸ் ஹீரோவாக்கியது அடுத்து வந்த கௌதம் வாசுதேவ மேனனின் காக்க... காக்க.

என்னதான் நந்தா சூர்யாவை அடையாளப்படுத்தியது என்றாலும் ரசிகர்களிடம் ஒரு மாஸ் ஹீரோவாக அவரை கொண்டு சேர்த்தது காக்க..காக்க படம்தான். இன்றும் அந்த படம் தந்த வெளிச்சத்தில்தான் சூர்யா நடைபோடுகிறார். அதன் பிறகு சூர்யா கீழ் நோக்கி பார்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
பிதாமகன், பேரழகன், கஜினி என்று அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னால் எதுவும் முடியும் என்பதை நிரூபித்தார். அவரை சி சென்டரின் நாயகனாக்கியது ஹரியின் ஆறு. அது அவரது திசையையும் சற்று மாற்றியது. அடிதடி, காதல், சென்டிமெண்ட் என்று அவரது படங்கள் கமர்ஷியல் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டன.
 

வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதனை தள்ளி வைத்து ஹரியின் வேல் படத்துக்கு கால்ஷீட் தந்தார்.

வேல் வெளியான பிறகே வாரணம் ஆயிரம் வெளிவந்தது. சூர்யாவிடம் இனி வித்தியாசமான முயற்சிகளை பார்க்க முடியுமா என்ற கேள்வி அப்போதே எழுந்தது. அதன் பிறகு அயன், ஆதவன், சிங்கம், மாற்றான் என்று அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் வட்டத்தை தாண்டாதவை. பேரழகன் போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தை இனி அவர் முயற்சி செய்வாரா என்பது சந்தேகம்.
நந்தா, காக்க.. காக்க, பிதாமகன், பேரழகன் போன்ற படங்களே சூர்யாவுக்கு தனித்த அடையாளத்தை தந்தன. ஆறு, வேல், அயன், சிங்கம் போன்ற படங்கள் அவரை மாஸ் ஹீரோவாக்கியது. இன்று தனித்த அடையாளத்தைவிட மாஸ் ஹீரோ இமேஜுக்கு தீனி போடும் படங்களுக்கே சூர்யா முன்னுரிமை தருகிறார். 

கதாபாத்திரமாக மாறிப் போவது ஒருவகை என்றால் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை - ஹீரோயிசத்தை  முன்னிறுத்துவது இன்னொருவகை.

முன்னது கமல் என்றால் பின்னது ரஜினி. கமலை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் சூர்யா ரஜினிவகை படங்களில்தான் தொடர்ந்து நடிக்கிறார்.

அவர் அவ்வப்போது கமலாகவும் மாற வேண்டும் என்பதே பேரழகனையும், பிதாமகனையும் ரசித்தவர்களின் விருப்பம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்