எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இதய அறுவை சிகிச்சை - செலவை ஏற்றுக் கொண்ட நடிகர் சிவகுமார்

ஜே.பி.ஆர்.

செவ்வாய், 2 டிசம்பர் 2014 (19:03 IST)
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சையின் மொத்த செலவையும் நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டார்.
எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆசிரியன். சமூகத்தின் சீக்குகளை களையும் மருத்துவன். அவனை போஷிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்துக்கு உண்டு. முக்கியமாக அரசுக்கு.
 
ஆனால், தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கேரளாவில் வைக்கம் முகமது பஷீர் இறந்தபோது அனைத்து ஊடகங்களிலும் பஷீரே நிறைந்திருந்தார். மாநிலமே மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டித்தது. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது. சமீபத்தில் கவிஞர் அய்யப்பன் இறந்தபோது ஆறு அமைச்சர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தமிழில்? ஒரு நடிகையின் நாய் தொலைந்து போனால் அதற்கு கிடைக்கும் கவனம்கூட எழுத்தாளனுக்கு தரப்படுவதில்லை.
 
இப்படியொரு சூழலில் எழுத்தாளர்கள் சினிமாவையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்து வருகிறார். தினம் ஒரு அத்தியாயம் என்று பத்து வருடங்கள். வருடத்துக்கு மூன்று நாவல்கள் வீதம் பத்து வருடங்களில் முப்பது நாவல்கள். அவருடைய பிரச்சனை இந்த நாவல்கள் குறித்து பரவலாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அதற்காக இளையராஜா, கமல்ஹாசன் ஆகியோரை வைத்து வெளியீட்டு விழா நடத்தினார். சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டாலாவது அதிக பிரதிகள் விற்காதா என்ற எதிர்பார்ப்பில்.
 
சாருநிவேதிதா தனது புதிய நாவலை இந்தி நடிகையை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளார். சினிமா என்றால்தான் அதிக நபர்களை நாவல் சென்றடையும். ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதி தங்களது லௌகீக செலவுகளை முடித்துக் கொள்ள முடிந்திருந்தால் சினிமாவுக்கு வந்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

பிரபஞ்சன் நாவல், சிறுகதை, குறுநாவல், விமர்சனம் என்று பரந்துபட்ட தளத்தில் பங்களிப்பு செலுத்தியவர். அரசனின் சாகஸங்களும், ராணிகளின் அழகும் மட்டுமே வரலாற்று நாவல்கள் என்று அறியப்பட்டு வந்த காலத்தில் மக்களின் வரலாறைச் சொல்வதுதான் உண்மையான வரலாற்று நாவல் என்ற புதுக்குரலுடன் வெளிவந்தன பிரஞ்சனின் வானம் வசப்படும் மற்றும் மானுடம் வெல்லும் நாவல்கள். தமிழின் சிறந்த புதினங்களில் அவை இரண்டுக்கும் இடமுண்டு.
பிரபஞ்சனின் மருத்துவ செலவை யாரும் கேட்காமலே அரசு முன்வந்து ஏற்றிருக்க வேண்டும். அதுசரி. ஆள்கிறவர்களுக்கு பிரபஞ்சன் யார் என்று தெரிந்தால்தானே. இங்கும் ஒரு நடிகர்தான் அவருக்கு உதவி செய்ய முன்வரவேண்டியிருக்கிறது. நடிகர் சிவகுமார் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றிருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகான செலவுகளுக்கு பல லட்சங்கள் தேவைப்படும்.
 
பிரபஞ்சன் போன்ற ஒரு எழுத்தாளருக்கு செய்வது உதவி அல்ல, கடமை. இந்த சமூகமும், தமிழ் சினிமாவும் எழுத்தாளர்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய எடுத்துக் கொண்டிருக்கிறது. முண்டாசுப்பட்டி திரைப்படமாகும்முன் அதன் இயக்குனர் ராம் (தங்கமீன்கள் ராம் அல்ல) அதனை குறும்படமாகதான் எடுத்தார். போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்று பயப்படும் கிராமம் என்ற படத்தின் மையக்கரு ராமுக்கு கிடைத்தது பிரபஞ்சனின் கதையிலிருந்து. குறும்படம் எடுப்பதற்கு முன் பிரபஞ்சனிடம் வந்து அனுமதி கேட்டிருக்கிறார். பிரபஞ்சனும் உடனே அனுமதி தந்திருக்கிறார், ஒரு ரூபாய்கூட பெற்றுக் கொள்ளாமல்.
 
குறும்படத்துக்கு கிடைத்த வெற்றியால் அதை விரித்து சினிமாவாக்கினார் ராம். ஆனால் பிரபஞ்சனிடம் அதுகுறித்து எதுவும் தெரியப்படுத்தவில்லை. முண்டாசுப்பட்டியின் மையக்கருவுக்கு சொந்தக்காரர் பிரபஞ்சன். அதை வைத்து அதற்கு சம்பந்தமில்லாதவர்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்த்தனர். எழுத்தாளன் என்றால் யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம். இது ஒன்று. இதேபோல் ஓராயிரம் சம்பவங்கள்.
 
இந்த சமூகமும், தமிழ் சினிமாவும் பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களுக்கு செய்வது உதவி அல்ல, கடமை. தகுந்த நேரத்தில் தேவையான உதவியை செய்த நடிகர் சிவகுமாருக்கு அனந்தகோடி நன்றிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்