நடிகர் சங்கத்துக்கு வரும் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார்.
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தின் தாய் பத்திரம் எங்களிடம்தான் இருக்கிறது. அந்த நிலம் நடிகர் சங்கத்துக்கே சொந்தம். எதிரணியினர் சொல்வது போல், எந்த தனியார் நிறுவனத்துக்கும் இடத்தை விற்கவில்லை என்று விளக்கமளித்தார்.
சரத்குமார் சென்னது 100 சதவீதம் உண்மை. ஆனால் இந்த உண்மைக்கு நடுவில் ஒளிந்துள்ள மர்மங்களை அவர் விளக்கவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 18 கிரவுண்ட் நிலத்தை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு 29 வருடங்கள், 11 மாதங்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் சரத்குமாரும், ராதாரவியும். அந்த இடத்தில் எஸ்.பி.ஐ.சினிமாஸ் வணிக வளாகம்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..
மற்றும் திரையரங்குகளை கட்டிக் கொள்ளலாம்.
இரண்டாயிரத்து நாநூறு சதுரஅடி இடத்தில் நடிகர் சங்கத்துக்கு அவர்களே கட்டிடம் கட்டித் தருவார்கள். மேலும், மாதம் 24 லட்சங்கள் நடிகர் சங்கத்துக்கு தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சரத்குமார் கூற்றுப்படி நிலம் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இருந்தாலும், ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 29 வருடங்கள் 11 மாதங்களுக்கு அந்த இடத்தை விற்கவோ, வேறு கட்டிடங்கள் கட்டவோ நடிகர் சங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், அந்த நிலம் தனியாருக்கே சொந்தம்.
ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும், எஸ்.பி.ஐ.சினிமாஸுக்கு விருப்பமிருந்தால், ஒப்பந்தத்தை தொடர, அவர்களுக்கு உரிமை இருப்பதாக சரத்குமாரும், ராதாரவியும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தேதியில் 200 கோடிகள் மதிப்புள்ள இடத்தில், 200 கோடிகள் செலவளிக்காமலே வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனம் குத்தகை காலம் முடிந்ததும் அதனை நீட்டிக்கவே விரும்பும்.
அந்தவகையில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலம் குத்தகைக்காலத்துக்கு பிறகும் தனியார் வசமே இருக்கும். அந்த இடத்தை நடிகர் சங்கம் விற்க விரும்பினாலும், எஸ்.பி.ஐ.சினிமாஸுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க எஸ்.பி.ஐ.சினிமாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகப் போடப்பட்ட ஒப்பந்தம். மாதம் 24 லட்சங்கள் வருமானம் வரும் என்கிறார்கள். அங்கு அமையப் போகும் வணிக வளாகம் மற்றும் திரையரங்குகளின் பார்க்கிங் கட்டணமே மாதம் 24 லட்சத்திற்கும் அதிகம் வரும்.
லட்ச ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மாதம் இரண்டு ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக ஒருத்தருக்கு தாரைவார்த்தால் அதனை நாம் என்னவென்று அழைப்போம்?