சென்றவார பாக்ஸ் ஆபிஸ் ஒரு பார்வை

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (12:21 IST)
வழக்கம் போல சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. தமிழ்ப் படங்களின் நிலைமை பரிதாபமாகவே உள்ளது.


 
 
கௌதம் தயாரிப்பில் வெளியான தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸின் டாப் 10 -க்குள் இல்லை. திருநாள் படமும் வெளியேறிவிட்டது. இடம்பிடித்திருக்கும் வாகா, ஜோக்கர், முடிஞ்சா இவன புடி படங்களும் குறைவாகவே வசூலித்துள்ளன. விதிவிலக்கு தர்மதுரை. தமிழில் அருகிப் போன ஃபீல்குட் வகை படம். ரசிகர்களை கவர்ந்துள்ளதால் முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
 
சென்னை பாக்ஸ் ஆபிஸில் எழுபதாயிரம் ரூபாய் வசூலுடன் பத்தாவது இடத்தில் தெலுங்குப் படம் பாபு பங்காரம் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் வாகா. சென்ற வார இறுதியில் 2.19 லட்சங்களை வசூலித்த இப்படம் கடந்த ஞாயிறுவரை 99.70 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
எட்டாவது இடத்தில் இந்திப் படமான மொகஞ்ச தாரோ உள்ளது. ஹிர்த்திக் ரோஷன் நடித்திருந்தும் படத்துக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. நாம் சொல்வது வடஇந்தியா மற்றும் வெளிநாடுகளில். சென்னையில் கடந்த வார இறுதியில் 3.20 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை 68 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
கடந்த வாரம் 10 -வது இடத்தில் இருந்த முடிஞ்சா இவன புடி இந்த வாரம் 7 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வார இறுதியில் 3.41 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 10.43 லட்சங்களை மட்டுமே வசூலித்து தோல்வியடைந்துள்ளது.
 
ஆறாவது இடத்தில் அக்ஷய் குமாரின் ரஸ்டம். சென்ற வார இறுதியில் 5.28 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 73.63 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
5. கபாலி
கபாலி இன்னம் டாப் 5 -க்குள் இடம்பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 6.60 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 11.22 கோடிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.
 
4. நம்பியார்
ஸ்ரீகாந்த் ரிஸ்க் எடுத்து தயாரித்து நடித்துள்ள படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 11.64 லட்சங்களை மட்டுமே வசூலித்து ஏமாற்றமளித்துள்ளது.
 
3. ஜோக்கர்
நேர்மறை விமர்சனங்களால் ஜோக்கர் படம் பிக்கப்பாகியுள்ளது. சென்ற வாரம் 5 -வது இடத்தில் இருந்த படம் முன்னேறி 3 -வது இடத்துக்கு வந்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 23.51 லட்சங்கள். இதுவரை சென்னையில் 68.80 லட்சங்களை படம் வசூலித்துள்ளது.
 
2. பென் ஹர் (ஆங்கிலம்)
பிரமாண்டமான இந்தப் படம் யுஎஸ்ஸில் பிரமாண்டமான தோல்வியை சந்தித்துள்ளது. எங்குமே ஓடாத இந்த ஆங்கிலப் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 2 -வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் வசூலித்திருப்பது 32.53 லட்சங்கள்.
 
1. தர்மதுரை
முதலிடத்தில் சீனு ராமசாமியின் தர்மதுரை. நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.09 கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூல் தொடர நமது வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்