புலிப்பார்வை இசை விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் - ஈழ வியாபாரத்தின் அடுத்த கட்டம்

சனி, 16 ஆகஸ்ட் 2014 (17:10 IST)
ஈழப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள சில தலைவர்களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததும், போராடியதும் தங்களின் சுயநல லாபத்திற்குதானோ என்கிற ஐயத்தை மேலும் உறுதிபடுத்தும்விதமாக நடந்துள்ளது மாணவர்கள் மீதான தாக்குதல். சீமானின் நாம் தமிழர் கட்சியினர், பாஜக, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியினர் கூட்டாக இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தினர்.
பிரவீன் காந்த் இயக்கியிருக்கும் புலிப்பார்வை படம்தான் அனைத்திற்கும் அடிப்படை. பிரபாகரனின் இளைய மகன் சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற படங்கள் வெளியான போது தமிழர்கள் மட்டுமின்றி கருணை உள்ள அனைத்து உள்ளங்களும் கலங்கின. இலங்கை அரசுக்கு அந்த புகைப்படங்கள் பெரும் நெருக்கடியாக அமைந்தன. 
அந்த நிகழ்வை படமாக்கினால் எளிதாக விற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் பச்சமுத்துவின் வேந்தர் மூவிஸ் தயாரித்த படம்தான் புலிப்பார்வை. இந்தப் படத்தில் சிறுவன் பாலச்சந்திரனை இளம் போராளியாக பிரவீன் காந்த் சித்தரித்திருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஈழப் போராட்டத்தை வைத்து காசு பார்க்கும் வியாபாரம் என்று பலரும் கண்டித்தனர்.
 

ஆனால் பிரவீன் காந்தும் வேந்தர் மூவிஸும் அதனை கண்டு கொள்ளவில்லை. படம் சீமானுக்கு மட்டும் பிரசாத் ஸ்டுடியோவில் ரகசியமாக திரையிடப்பட்டது. சில திருத்தங்களை சீமான் பரிந்துரைத்ததாக தெரிகிறது. சீமானின் ஆசிர்வாதம் கிடைத்ததால் மற்றவர்களின் எதிர்ப்பை மீறி படத்தின் பாடல்களை வெளியிட்டனர். அந்த நிகழ்வில்தான் சீமான், பச்சமுத்து, பாஜக வின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் தாக்கப்பட்டனர்.
புலிப்பார்வை, கத்தி படங்களுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சீமான் விலை போய் விட்டார் என்பதுதான் மாணவர்களின் குற்றச்சாட்டு. பாடல் வெளியீட்டு விழாவிலும் அதனை முன்வைத்தே, சீமான் பதில் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர்.
 

இதனை எதிர்பார்த்து சகல ஆயுதங்களுடன் வந்திருந்த நாம் தமிழர் கட்சியினரும், பாரதிய ஜனதா கட்சியினரும், பச்சமுத்துவின் அடியாட்களும் மாணவர்களை தடியாலும், இரும்பு கம்பியாலும் தாக்கினர். இந்த வன்முறையில் தாக்கப்பட்ட மாணவர்கள் மட்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி அருகிலுள்ள கல்யாண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அதே ஈழத்தமிழர் விரோதப் போக்கையே மோடி அரசும் கடைபிடித்து வருகிறது. சுப்பிரமணியசாமி போன்ற தமிழர் விரோத நபர்கள்தான் இந்திய அரசின் பிரதிநிதிகளாக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றனர். தமிழர் நலத்தில் அக்கறையுள்ள எந்த தலைவர்களின் கோரிக்கையையும் மோடி அரசு கண்டு கொள்வதாக இல்லை. 
 

முன்பெல்லாம் இதற்கு கொடி பிடிக்கும் சீமான் இப்போது வாயே திறப்பதில்லை. பாஜக -ன் செயலுக்கு மௌனம் காப்பவர் இன்று அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில்தான் கேள்வி கேட்ட மாணவர்கள் மீது தனது கட்சியினரை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று நேற்று அறிக்கை வெளியிட்ட சீமான் இன்று அதே பாஜக -வுடன் இணைந்து கேள்வி கேட்ட மாணவர்களை தாக்கியுள்ளார். இந்த இரட்டை நிலைபாடுக்கு பெயர்தான் சந்தர்ப்பவாதம். ஈழ ரத்தத்தின் மீது நடத்தப்படும் இந்த வியாபாரத்தை ஈழத்தமிழர்களின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்