குடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர்களின் Noise Pollution

வெள்ளி, 21 மார்ச் 2014 (11:46 IST)
நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். மேலும் நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.
FILE

எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல் மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனி நடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். அதன்படி இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது - உதயநிதி ஸ்டாலின்.

ஒருவன் எவ்வளவு நல்லவனாக, திறமைசாலியாக இருந்தாலும், சே... அவன் குடிகாரன் என்று ஒரே வார்த்தையில் அவனை குப்புற தள்ளிவிட முடியும். அதேமாதிரிதான் நான் குடிக்கிறதில்லை, குடிக்கிற காட்சியில் நடிக்கிறதில்லை என்று சொல்லி இமேஜை உயர்த்திக் கொள்வதும். இரண்டுமே தவறுதான்.

என்னுடைய படத்தில் ஆபாசக் காட்சிகள் இருக்காது, குடிக்கிற காட்சியை வைக்க மாட்டேன், புகைக்கு இடமேயில்லை என்று சில இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கூறுவதை கேட்டு வருகிறோம். இந்தக் காட்சிகளை தமிழ் சினிமா பெரும்பாலும் தவறாகவே கையாண்டு வருகிறது. அப்படி தவறாக கையாள்வதற்குப் பதில் அவைகள் இல்லாமல் இருப்பது ஆறுதல். அந்த அளவில் மட்டுமே இவர்களின் சமூக கரிசனத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்தக் காட்சிகள் இல்லாததாலேயே இவர்களின் படங்கள் நல்ல படம் ஆகிவிடாது.

ஜெமினி படத்தில் ஸ்டைலாக புகைப் பிடிப்பது போல்தான் இயக்குனர் சரண் விக்ரமின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். பிறகு அது பான் போடுவதாக மாற்றப்பட்டது. படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோ தங்களின் படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகள் வைப்பதில்லை என்பதால் இந்த மாற்றம். சிகரெட்டுக்குப் பதில் பான். இதில் என்ன சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? ஜெமினி தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாகிவிட்டதா?
FILE

சினிமாவில் குடியும் சரி, நிர்வாணக் காட்சிகளும் சரி. அவை எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் முக்கியமானது. சென்ற வருடம் கான் திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்கான பாம் டி ஓர் விருது பெற்ற Blue Is the Warmest Colour படத்தில் லெஸ்பியன் காட்சிகள் உண்டு. அப்படத்தின் முக்கியத்துவத்தை, சிறப்பை அந்தக் காட்சிகள் பாதிக்கவில்லை. தீபா மேத்தா எடுத்த ஃபயர் படத்திலும் அத்தகைய காட்சிகள் உண்டு. அந்தப் படங்கள் சிறிதளவு நிர்வாணமும் இல்லாத எத்தனையோ படங்களைவிட முக்கியமானதாக இருக்கின்றன. அதுபோலதான் மது அருந்துகிற காட்சிகளும். நல்ல படங்கள் என உதாரணம் காட்டப்படுகிற பெரும்பாலான படங்களில் மது அருந்துகிற காட்சிகள், சிகரெட் புகைக்கிற காட்சிகள் இருக்கின்றன.

அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் சிறுவர்கள் பிரதாப்போத்தன் சிகரெட் புகைப்பதைப் பார்த்து அதேபோல் சிகரெட் புகைக்க முயல்வார்கள். மீசை அரும்புகிற பருவத்தில் பெரிய மனிதர்கள் செய்வதை அப்படியே இமிடேட் செய்வதன் வழியாக தங்களையும் பெரிய மனிதர்களாக கருதிக் கொள்ளும் சிறுவர்களின் மனநிலையை அந்தக் காட்சியின் வழியாக பாலுமகேந்திரா கூறியிருப்பார். சிறுவர்களின் மனவுலகை வெளிப்படுத்துவதாக அந்தக் காட்சி இருக்குமேயன்றி பார்வையாளர்களை புகைப் பிடிக்க தூண்டுவதாக இருக்காது. பாலுமகேந்திரா அதை வைத்த நோக்கமும் அதுதான். ஹேராம் படத்தில் போதையில் இருக்கும் கமல் தனது மனைவியை புணர்கையில் மனைவி ஒரு துப்பாக்கியாக அவர் கண்களுக்கு தெரிவார். அதே போதையில்தான் காந்திக்கு எதிரான கருத்துகள் அவரிடம் சொல்லப்படும். போதை ஒரு மனிதனின் சிந்தனையை எவ்வளவு தீவிரமானமான இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை காட்டும் விதமாக கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் இணக்கமானமுறையில் அந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் உதயநிதி போன்றவர்கள் நடிக்கிற படங்களின் கதையே வேறு. ஹீரோயினை கரெக்ட் பண்ண நண்பனின் ஐடியா கேட்பதற்காக டாஸ்மாக்குக்கு அவனை கூட்டிச் சென்று இவர் ஊற்றிக் கொடுப்பார். நண்பனும் போதையில் அசட்டுத்தனமான ஆலோசனையை எடுத்துவீசுவார். இல்லையென்றால் போதையில் லுங்கி அவிழ்வது தெரியாமல் டான்ஸ் ஆடுவார்கள். இதெல்லாம் வெறும் திணப்பு. படம் பார்க்க வருகிறவர்களை டெம்ப்ட் செய்வதற்கு வைக்கப்படுகிற குப்பைகள். மது அருந்துகிற காட்சி மட்டுமின்றி இவர்களின் படங்களில் காட்டப்படுகிற காதல், சென்டிமெண்ட் எல்லாமே அசட்டுத்தனமானதுதான்.
FILE

மேலும், மது அருந்துவது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. ஒழுக்கம் சார்ந்த அம்சங்கள் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி வித்தியாசப்படும். தமிழ்நாட்டில் மதுவுடன் விருந்தினர்களை உபசரிப்பது கலாச்சார பிறழ்வு. மதுவில்லாமல் உபசரிப்பது பிரான்சில் கலாச்சார பிறழ்வு. பெரும் தெய்வங்களை மதுவருந்திவிட்டு தரிசித்தால் அபச்சாரம். சுடலை மாடனுக்கு விருப்பப் படையலே சாராயம்தான்.

ஆனால் அறம் சார்ந்த விஷயங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். திருடுவதும், ஊழல் செய்வதும், அடுத்தவர் உயிரைப் பறிப்பதும் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் பெருங்குற்றம்.

மது அருந்துகிற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தங்களின் சமூக கரிசனத்தை காட்டுகிறவர்கள் அறம் சார்ந்த விஷயங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

மது அருந்துகிற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று டாஸ்மாக்கில் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் தேவதூதனாகும் இந்த வெற்று அரசியல் ஸ்டண்டுக்கு எந்த சமூக மதிப்பும் இல்லை. முன்பு கூறியது போல், அசட்டுத்தனமாக எடுப்பதற்குப் பதில் எடுக்காமலிருப்பது மேல் என்ற அளவிலே இவர்களின் குடிக்க மாட்டேன் கரிசனத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஆடத் தெரியாதவன் மேடையேறாமலிருப்பது மேல்.

மற்றபடி அறம் சார்ந்த தங்களின் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற ஒழுக்கம் சார்ந்த வெத்து வேட்டுகளை இவர்கள் அடிக்கடி கொளுத்திப் போடுகிறார்கள். இப்படியொரு பாரம்பரியம் நமக்கு இல்லாமலிருப்பது பாக்கியம். இந்த ஒழுக்க வெடிகளெல்லாம் வெறும் Noise pollution மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்