உள்ளங்கையில் உள்ள சக்திகள் என்ன; அவற்றை எவ்வாறு பெறுவது....?
கொடுக்கப்பட்ட சக்திகளும், வேண்டி பெறப்பட்ட சக்திகளும், பூமியில் தோன்றுகிற அனைத்தும் இந்த பூமிக்கே சொந்தம். அன்னை பூமாதேவி அனைத்தையும் ஆளக்கூடியவர், தாங்கக்கூடியவர், எந்த சக்தியையும் இழக்கக்கூடியவரும் இவரே.
அழியும் எதுவும் மண்ணுக்கே போகும். மண்ணில் விளைந்ததை உண்டு வாழும் மனிதனாயினும் மண்ணுக்கே சொந்தம், ஆத்மா என்னும் நாராயணன் உள்ள வரை பூமாதேவி மனிதனை தின்னாமல் விட்டு வைப்பார். (ஆத்மா பிரிந்த பின் உடல் எரிந்தாலும் சாம்பல் மண்ணில்தான் புதைய வேண்டும்). அன்னை பூமாதேவி சத்தியத்திற்கு கட்டுப்பட்டவள் எதையும் நாம் கொடுக்காமல் எடுக்கமாட்டாள்,
வான் சக்தியை மட்டும் நாமறியாமலேயே எடுத்துக்கொள்வார், (அதனால் தான் பிரபஞ்ச ஆற்றலை பெற்றவர்கள் பாத அணி இல்லாமல் நடக்க மாட்டார்கள்) அன்னை பூமாதேவிக்கு நாமாகக் கொடுக்கக்கூடியதாக ஒருமுறை உண்டு அது நம் இரு உள்ளங்கையையும் நன்கு பதியும்படி பூமியில் வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை எடுத்துக் கொள்வார். அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலம் சரி. ஞான சக்தி ஆனாலும் சரி எடுத்துக் கொள்வார். ஒட்டு மொத்தமாக எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் எடுத்துக்கொள்வார்.
பாவத்தினால் அதிகமாக சிரமப்படுவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல் பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள், அதற்கு பலிபீடம் என்று பெயர். இன்றைக்கு இந்த பலிபீடத்திற்கு ஏதேதோ விளக்கம் கூறுகிறார்கள், நம் கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யும் இடமாகும், மனதால் விடமுடியாத பாவங்களை தன் உள்ளங்கையால் விடமுடியும்.
எனவே ஆலயங்களில் இந்த பலிபீடம் முக்கியம் வாய்ந்ததாகும், அதே போல் சாப்பிடும்போது நம் கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நம் சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் சாமி கும்பிட்டபின் விழுந்து கும்பிட்டபின் இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம். (விழுந்து கும்பிடும்போதும். இரு உள்ளங்கையும் ஒன்றோடு ஒன்று ஒட்டினார்போல் கை வைத்து வணங்கி பின் கால் பலத்தால் எழலாம்). உள்ளங்கையில் அவ்வளவு சக்தி நிறைந்துள்ளது.