கருடனை தரிசிப்பது சுப சகுனம் ஆகும். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி என்று கூறுவர். கும்பாபிஷேகத்தின்போது பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது.
அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் கருட பஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.
ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும்.