ருத்ராட்சத்தின் வகைகளும் அதனை அணிவதால் கிடைக்கும் பலன்களும்....

மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது. தியான  நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.
வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.
 
ருத்ராட்சத்தின் வகைகள்:
 
பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய  வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
 
த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை  கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
 
ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
 
கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா  என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன்,  பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலர் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவதுதான் சிறந்த நன்மைகளைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்