மனதை செம்மைப்படுத்தும் நமசிவாய மந்திரத்தின் பொருள்...!
திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று, அதாவது மனது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். மனதை செம்மைப்படுத்த ஒருநிலையாக்க மந்திரம் என்பது அவசியம்.
நமசிவாய மந்திரம் நம் கை விரல்களில் இருக்கின்றன.
சுண்டு விரல் ‘ந’ நிலத்தின் சக்தி ‘ரம்’ என்ற மந்திரம்.
மோதிர விரல் ‘ம’ வீர சக்தி ‘லம்’ என்ற மந்திரம்.
நடு விரல் ‘சி’ நெருப்பு சக்தி ‘யம்’ என்ற மந்திரம்.
குரு விரல் ‘வா’ காற்று சக்தி ‘வம்’ என்ர மந்திரம்.
பெரு விரல் ‘ய’ ஆகாய சக்தி ‘அம்’ என்ற மந்திரம்.
ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள். யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள், பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தால பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்கும்மாகிவிடுகிறது.
பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.
மந்திரம் சூக்குமம் ஆகும் போது மாத்திரை குறைந்து விடுகிறது. உச்சரிப்பதற்கு எளிதாகி விடுகிறது. பிராணாயாமம் பயிலும் போது குரு சாதகனுக்கு ஏற்றவாறு இந்த மந்திரங்களை மாற்றித் தருவார். எந்தெந்த சாதகனுக்கு எத்தகைய பிராணாயாமம், அதற்கேற்ற மந்திரங்கள் எது என்பதை குருவே தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பக்தியில் திளைத்திருப்பவர்கள் ஓம்நமசிவாய என்ற மந்திரத்தை வேண்டியவாறு உச்சரிக்கலாம்.