ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து, ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை ஒருவன் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது. ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒரு போதும் யமலோகம் செல்வதில்லை. பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது, திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.