திருச்செந்தூர் கோவிலின் சிறப்புக்களும் அறிந்திடாத சில தகவல்களும் !!

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
 

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
 
குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர். முருகன், மால்,  ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
 
செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.
 
வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். திருச்செந்தூர்  முருகனுக்குத் தங்கத் தேர் உள்ளது. இத்திருத்தலத்தில் நவக்கிரகங்களுக்குச் சிலை கிடையாது.
 
மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
 
முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை,  சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.
 
உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.
 
இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர். இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர். மிக மலிவான விலையில் இக்கட்டிகள் பிரகாரங்களில் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்