இதுவரை உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு வாழ்க்கை மீது ஒருபிடிப்பு இல்லாமல் செய்தாரே! எந்தவிதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் திணறடித்தாரே! எப்போதும் சோகக் கடலில் மூழ்கடித்தாரே! எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒருவித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே! உங்கள் குடும்பத்தினர் கூட உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் அவமதித்தார்களே! அடிக்கடி தலைச்சுற்றல், முதுகு வலி, கால் வலி என முணுமுணுத்தீர்களே! காரண காரியமே இல்லாமல் கோபப்பட்டு எல்லோரையும் பகையாளியாக்கி வேடிக்கை பார்த்தாரே! இப்படி பல வகையிலும் பிரச்னைகளை தந்து மூச்சுவிட முடியாமல் திணறடித்த ராகுபகவான் இப்போது ராசிக்கு 12&ம் வீட்டிற்கு செல்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். அழகு, இளமைக் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு, தள்ளப் போன காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடிவடையும். சந்தேகத்தாலும், ஈகோவாலும் பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும் ராகு விரையஸ்தானமான 12&ல் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். ஐம்பது ரூபாயில் முடியவேண்டிய விஷயங்களைக் கூட ஐந்நூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். நீங்கள் ஒரு பட்ஜெட் போட்டு இதற்குள் முடிக்க வேண்டுமென்று நினைத்தால் முடியாமல் இரண்டு மடங்கு அதிகமாகும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சாதுக்கள், சித்தர்களின் ஆசி பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும்.