அருள் தரும் புரட்டாசி தமிழ் மாத மாத ராசிபலன்கள் 2025! – ரிஷபம்

Prasanth K

வியாழன், 18 செப்டம்பர் 2025 (07:01 IST)
பெருமாளின் அருள் தரும் மாதமான புரட்டாசி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
29.09.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
08.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். 

க்ருத்திகை:
இந்த மாதம் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

ரோகினி:
இந்த மாதம் பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

ம்ருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 29, 30, அக்டோ 01
அதிர்ஷ்ட தினங்கள்:      அக் 08, 09

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்