ஏதோ ஒரு எண்ணெய்யை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும். செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.